பாதுகாப்பு அமைச்சின் நேரடி கண்காணிப்பின் கீழ் தொலைபேசி சேவை நிறுவனங்கள்

கையடக்க தொலைபேசிகளுக்காக பயன்படுத்தப்படும் சிம் அட்டைகள் கொள்வனவு செய்யப்படுவதை குறைக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக விசேட பாதுகாப்பு நடைமுறை உருவாக்கப்பட உள்ளதுடன் இதன்படி ஒருவர் கொள்வனவு செய்யக் கூடிய சிம் அட்டைகளின் எண்ணிக்கை 5 என வரையறுக்கப்படவுள்ளது.

கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தை தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

சிம் அட்டைகளை கொள்வனவு செய்யும் போது வேறு நபர்களின் தேசிய அடையாள அட்டைகள் பயன்படுத்துவது சம்பந்தமாக தகவல்கள் தொடர்ந்தும் கிடைத்து வருகின்றன.

அண்மையில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரிடம் இருந்து இப்படியான சிம் அட்டைகளை கொள்வனவு செய்யவும் விற்பனை செய்யவும் பயன்படுத்திய பலரது தேசிய அடையாள அட்டைகளின் 5 ஆயிரத்து மேற்பட்ட பிரதிகள் கைப்பற்றபட்டன.

இதனிடையே இலங்கை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் இயங்கி வந்த அனைத்து தொலைபேசி சேவை நிறுவனங்களையும் பாதுகாப்பு அமைச்சின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏற்கனவே இது சம்பந்தமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது.