யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கொரோனா அச்சம் – 60 பேருக்கு பி சீஆர் பரிசோதனை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற வெளிமாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 60 பேருக்கு இன்று பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மொத்தமாக 78 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இதில் 09 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடல் எல்லையைத் தாண்டி இந்தியக் கடல் எல்லைக்குள் சென்று, இந்திய மீனவர்களது றோலர்ப் படகுகளில் ஏறி தங்கியிருந்துள்ளதுடன், இந்திய தமிழ்நாட்டுப் பகுதிக்குள் இவர்கள் சென்று வந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.