சிகிச்சை பலனின்றி 7 வயது சிறுமி மரணம்: தொடர் மிரட்டலுக்கு பயந்து மருத்துவர் தற்கொலை

கேரளாவில் மிரட்டலுக்கு பயந்து மருத்துவர் ஒருவர் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த டாக்டர் அனூப் கிருஷ்ணா, தனியார் மருத்துவமனை நடத்தி வந்தார்.

அங்கு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார் அனூப் கிருஷ்ணா.

சிகிச்சை முடிந்த பின்னர் கடந்த மாதம் 23ம் தேதி அச்சிறுமி இறந்து போனார்.

இதையடுத்து, உறவினர்கள் குழந்தையின் உடலுடன் மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினார்கள்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதும், விரைந்து வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அகற்றினார்கள்.

அந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, சிறுமி பலியானது தொடர்பாக உறவினர்களும், சில அரசியல்வாதிகளும் அனூப் கிருஷ்ணாவுக்கு தொடர்ந்து போனில் மிரட்டி வந்துள்ளனர்.

மேலும், அவரை பற்றியும், அவரது குடும்பத்தினரை பற்றியும் கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களில் பல அவதூறு செய்திகள் வைரலானது. இதனால், அனூப் கிருஷ்ணா மிகவும் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டார்.

தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் இருந்ததால் மிரட்டலுக்கு பயந்து போய் தனது மணிகட்டு நரம்புகளை அறுத்து, வீட்டு மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அனூப் கிருஷ்ணா தற்கொலைக்கு சிறுமியின் உறவினர்களே காரணம் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

அனூப் கிருஷ்ணாவுக்கு, அர்ச்சனா பிஜூ என்ற மனைவியும், 7 வயதில் மகனும் உள்ளனர்.