PCR பரிசோதனைகளை அதிகரிக்க உடன் நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களை அடையாளம் கண்டு கொரோனா தொற்று பரவுவதனை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு உட்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவுடனான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுவதில் ஏற்பட்ட தோல்வியே கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.
தற்போதைய நிலைமை பற்றிய தெளிவான புரிதலுடன் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முன்முயற்சிகளுக்கு உதவ பொது மக்களும், ஊடகங்களும் கடமைப்பட்டுள்ளன.
இரண்டு மாதங்கள் கழித்து சமூகத்திலிருந்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் குறித்து தொடர்ந்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி ஊடகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.