அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக விக்கி நிறுத்தப்படமாட்டார்!

சீ.வி.விக்னேஸ்வரன் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது;

வடக்கு மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை அடுத்த மாகாண சபைத் தேர்தலிலும் முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பு நிறுத்தும் எண்ணம் இருக்கிறதா என்று என்னிடம் கேள்ளி எழுப்பியிருந்த போது அவ்வாறான எண்ணம் எங்களுக்கு அறவே இல்லை என்று தெரிவித்திருக்கின்றேன்.

அதற்கான காரணம் விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக நாங்கள் வருந்தி அழைத்துக் கொண்டு வந்த போது அனைத்துக் கட்சித் தலைவர்கள் மத்தியிலே சில நிபந்தனைகளை அவர் முன்வைத்திருந்தார்.

நானும் அந்த இடத்திலே இருந்திருந்தேன்.

அதாவது இரண்டு வருடங்களுக்கு மட்டும் தான் நான் முதலமைச்சராக இருப்பேன்.

அதற்குப் பிறகு தம்பி மாவை இதனைப் பொறுப்பெடுக்க வேண்டும். மேலும் மாவையும் என்னுடன் சேர்ந்து தேர்தலிலே நிற்க வேண்டும்.

அதற்கமைய நான் இரண்டு வருடங்கள் பதவி வகித்த பின்னர் அந்தப் பொறுப்பை நான் அவரிடமே கொடுப்பேன் என்றும் சொல்லியிருந்தார்.

அதற்கு நாங்கள் எவரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் அன்றைய பேச்சுவார்த்தை முடிவடைந்த தருவாயில் நாங்கள் ஒரு தேர்தலுக்குப் போகிறோம் என்பதால் இரண்டு வருடங்களுக்கு என்று சொல்லிக் கொண்டு போவது அழகல்ல என்று கட்சித் தலைவர் சம்மந்தன் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்த இரண்டு வருடக் கதையை இப்ப சொல்லத் தேவையில்லை என்றார்.

ஆனால் இரண்டு வருடத்திற்கு மட்டும் தான் இருப்பேன் என்றும் அதற்குப் பிறகு தம்பி மாவை பொறுப்பெடுக்க வேண்டுமென்று அவர் சொன்னதற்கு நான் மட்டுமல்ல குறைந்தது இன்னும் ஆறு ஏழு பேர் சாட்சி.

ஆகையினால் இன்னமும் அவரை நாங்கள் வருத்தி வைத்திருப்பது நல்லதல்ல என்பது என்னுடைய சிந்தனை.

அகவே அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று கேட்ட போது அது குறித்து பொறுத்த நேரத்தில் நாங்கள் எங்களுடைய முடிவை எடுப்போம் என்று பதிலளித்தார்.