கிழக்கில் அரச நியமனத்தில் அரசியல் ஆதிக்கம் – கவலை வெளியிட்டுள்ள சாணக்கியன்

அரச தேவைகளுக்காக அரச அதிபர்களை இடமாற்றம் செய்வதும் நியமனம் செய்வதும் தவறான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமிக்கப்பட்டு பத்து மாதங்களே தான் ஆகின்றது. அதற்குள் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவர் முன்பாக இருந்த அரசாங்க அதிபரும் அவரது ஓய்வுக்காலத்தின் முன்னர் இடமாற்றப்பட்டார்.

இந்த அரசாங்க அதிபரை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என சிலர் தெரிவித்தனர். இதேநேரம் அரச அதிபர் சிலருக்கு ஆதரவாக செயற்படுவதாக எங்களது கட்சி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதற்கு அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

இந்த இடமாற்றத்தை நான் கலாமதி பத்மராஜாவின் இடமாற்றமாக பார்க்கவில்லை. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றமாகவே பார்க்கின்றோம். நாம் எப்போதும் அரச அதிகாரிகளின் கரங்களை பலப்படுத்த வேண்டும்.

அரச அதிகாரிகள் சரியான முறையில் செயற்படும்போது அவர்களுக்கு அழுத்தங்கள் உருவாவதுடன் இடமாற்றங்களும் வழங்கப்படுகின்றன. இதனால் அரச அதிகாரிகள் தங்களது கடமையினை மேற்கொள்ள தயங்குவர் என்றார்.

இதேநேரம் இடமாற்றம் தொடர்பில் பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டாலும் மண் தொடர்பான அனுமதி தொடர்பான பிரச்சினை மயிலித்தே மடு தொடர்பான பிரச்சினை அரசுக்கு ஆதரவான சிலரை இடமாற்றி செயற்பாடுகள் தொடர்பாகவே அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன்.

இது இவ்வாறிருக்கு நாங்கள்தான் இந்த அரசாங்க அதிபரை கொண்டுவந்தோம் என சொன்னவர்கள் தற்போது அரச அதிபர் ஒருவருக்கு அநீதி நடக்கும்போது மௌனமாக உள்ளனர்.

அவர்களது எஜமானர்களின் தவறான முடிவையும் தலையாட்டி பொம்மைகளாக இருந்து ஆதரிப்பது கவலையான விடயம் என்றார்.

மயிலித்தே மடு தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் கூறினார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அவர் கிழக்கு மாகாணத்தின் குட்டி ஜனாதிபதியாக இருந்து தன்னுடைய வேலைத்திட்டத்தை திணிப்பதாக கூறினார்.

எல்லோருடைய கருத்தையும் உள்வாங்கி சரியான முறையில் செயற்படுகின்றவரே ஆளுநராக இருக்க வேண்டும். மாறான தான் எடுக்கும் முடிவகள் அனைத்தும் சரி என நினைக்கின்றவர் பொருத்தமற்றவர். எனவும் குறிப்பிட்டார்

– Kajan –