பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த முத்தையா முரளிதரன்… 800 படத்திலிருந்து விஜய் சேதுபதியை விலக கோரி வெளியிட்ட அறிக்கை

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கவிருக்கும் 800 திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன் காரணமாக இவரின் பயோபிக் திரைப்படத்துக்கு `800′ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தை எம்.எஸ்.ஶ்ரீபதி இயக்குகிறார். முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.

கடந்த ஆண்டு இந்தப் படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானபோதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. வி.சி.க, பெரியாரிய அமைப்புகள் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகளும் `தமிழினத் துரோகி ராஜபக்‌ஷேவின் ஆதரவாளரான முரளிதரனின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது’ எனக் கோரிக்கை வைத்தனர். ஈழத் தமிழர்கள் பலரும் அந்தச் சமயத்தில் விஜய் சேதுபதிக்கு எதிராகப் போர்க் கொடித் தூக்கினர்.

இந்நிலையில் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதில் தன்னால் ஒரு கலைஞரின் வாழ்க்கைப் பயணத்தில் தடை வந்துவிடக்கூடாது என்பதற்காக விஜய்சேதுபதியினை இப்படத்திலிருந்து விலக கோரியுள்ளார்.

முரளிதரன் அறிக்கையை மேற்கோள் காட்டி நன்றி..வணக்கம் என நடிகர் விஜய் சேதுபதி ட்வீட் செய்துள்ளார்.