நம்பிக்கையில்லா பிரேரணையின் போது எந்தவொரு ஒப்பந்தமும் செய்யப்படவில்லை: சுமந்திரன்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (சனிக்கிழமை) சுமந்திரனின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் பிரதமருக்கும் அரசுக்கும் எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு, அது தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணை இலங்கை அரசியலில் தாக்கம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரேரணையையில் தமிழ்த் தேசியகூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்த இருந்தது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது நாட்டின் அனைத்து மக்களும் ஆதரவு வழங்கியிருந்தனர். இது முக்கியமானதாகும் என்றும் சேராத இரு கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்திருந்தார்கள்.

இது அமைக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை அமைப்பதாகும். 2016ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி, அரசியலமைப்பு ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த தேசிய அரசின் காரணமாக இடைக்கால அறிக்கை ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. இந்த முயற்சி பொது எதிரணி உட்பட அனைத்து தரப்பும் சேர்ந்து எடுத்த முயற்சியாகும். இந்த நிலையில்தான் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. இதைக் காட்டி அரசியலமைப்பு பணிகளை நிறுத்த முடியாது.

ஆகையால் தான் இந்த அரசு நீடிக்க வேண்டும் புதிய அரசியலமைப்பு பணிகள் தொடந்து முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என்ற நோக்கில் பிரேரணையை எம் போன்ற சிறுபான்மை கட்சிகளின் ஆதரவுடன் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இதில் கூட்டமைப்பின் 16 வாக்குகள் பிரதானமாக இருந்தது. கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்குகின்றது என்று பார்த்த பின்னர் தான் பிரதமருக்கான ஆதரவுகள் அதிகரித்திருந்தன.

இதனை தெற்கில் இன ரீதியாக சித்தரிக்க முயற்சிகள் நடைபெறுகின்றது. கூட்டமைப்பின் வாக்குகளால் தான் அரசு காப்பாற்றப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது. சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் பிரேரணைக்கு எதிராக தான் வாக்களித்தார்கள்.

பிரதமருடன் 10 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதா? கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டதா என்று பலராலும் கேள்வியெருப்பப்படுகின்றது. அரசை தொடந்து முன்னெடுக்கும் போது தடங்கலாக உள்ள 10 விடயங்களையும் சுட்டிக்காட்டியிருந்தேன்” என கூறினார்.