காவேரிக்காக வடக்கு மக்கள் குரல் கொடுக்கவேண்டும். – யாழில் கருணாஸ் கோரிக்கை! (Video)


காவேரி மேலாண்மை தமிழக மக்களுக்குக் கிடைக்க வடமாகாண மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’ என தென்னிந்திய நகைச்சுவை நடிகரும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்னிந்திய நகைச்சுவை நடிகரும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று (06) சந்தித்து கலந்துரையாடினார்.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தமிழக முகாம்களில் உள்ள 120 மாணவ மாணவியர்களின் உயர்கல்வியில் பாரிய பிரச்சினை காணப்படுகின்றது. மற்றவர்களிடம் கையேந்துவதை விட தாமாகவே ஒரு கல்லூரியைக் கட்ட வேண்டுமென்று எண்ணியுள்ளோம்.

கல்லூரி அமைப்பதுக்கான காணியை தற்போது வாங்கியுள்ளேன். தமிழகத்தில் முகாம்களில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி மற்றும் துணைக் கல்லூரி அமைக்க வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை. அந்த கல்லூரிக்கான அடிக்கல்லினை ஒட்டுமொத்த தமிழர்களும் ஏற்றுக்கொண்ட ஒருவராகவும், தகுதியுடையவரும் நாட்ட வேண்டும். அவர் சுயநலமற்ற பொதுநலவாதியாக இருக்க வேண்டும்.

முதலமைச்சர் சில திகதிகளை குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துக்குச் சென்று அங்கு தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடிய பின்னர், கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்துக்கு முதலமைச்சரை அழைப்பதுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

முதலமைச்சர், தமிழக இளைஞர்கள் ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட போது, ஜல்லிக்கட்டு தடையின் போது, ஆறுதலாக இரு அறிக்கைகள் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை பெரும் உற்சாகத்தை தமிழக மக்களுக்கு கொடுத்திருந்தது.

காவேரி பிரச்சனை தொடர்பாக முதலமைச்சரிடமும் எடுத்துரைத்துள்ளேன். உலக தமிழர்கள் அனைவரும் காவேரி மேலாண்மையில் ஒன்றுபட்ட கருத்துக்களை வெளியிட வேண்டுமென்பதுடன், ஜல்லிக்கட்டினை தாண்டிய மிகப்பெரும் போராட்டத்தினையும் முன்னெடுக்க வேண்டுமென்ற கோரிக்கையையும், முதலமைச்சரிடம் முன்வைத்துள்ளேன்’ என்றார்.