கொரோனா தொற்றினால் பிரான்ஸில் அகதி தஞ்சம் கோரிய இலங்கைத்தமிழர்களின் பரிதாபநிலை

உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றினால் பிரான்ஸில் அகதி தஞ்சம் கோரிய இலங்கைத்தமிழர்கள் பரிதாபநிலைக்குள்ளாகியுள்ளனர்.

பிரான்ஸில் வாழும் பெரும்பாலான யாழ்ப்பாணத் தமிழர்களின் சுயதொழில் என்பது கடை நடத்துவதாகும்.

அதிலும் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் லாச்சப்பல் பகுதியில் யாழ்ப்பாணத் தமிழர்களின் தனித்துவமான இடமாக காலூன்றி நிற்கின்றது.

அதேநேரம் லாச்சப்பல் பகுதி மட்டுமன்றி பிரான்ஸின் பல பகுதிகளிலும் தமிழ் மக்களின் இருப்பு என்பது அதிகமாகவேயுள்ளதுடன், அங்கும் கடைகள் நடாத்தி தங்கள் வருமானத்தையும் அவர்கள் ஈட்டிக் கொள்கின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரான்ஸில் அதிகரித்து வரும் கொரோனாத் தொற்றின் காரணமாக இரவு நேர ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு நேர வியாபாரங்கள் பாரியளவில் பாதிப்படைந்துள்ளன.

குறிப்பாக பிரான்ஸில் உள்ள பெரிய கடைகள் இரவு 10 மணியுடன் மூடப்பட, அதன் பிற்பாடு தமிழ் கடைகளில் வியாபாரம் சூடுபிடிக்கும்.

இதன் காரணமாக தமிழ் கடைகள் நள்ளிரவு 12 மணிவரை திறந்திருப்பதுடன், வெள்ளி, சனிக்கிழமைகளில் அதிகாலை ஒரு மணிவரையும் திறந்திருக்கும். தமிழ் கடைகளில் பொருட்களின் விலைகளும் அதிகமாக இருப்பினும் , மக்கள் தங்களின் அவசர தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தமிழ்க் கடைகளை நாடுவதுண்டு.

தற்போது ஊரடங்குச் சட்ட நடைமுறையால் தமிழ் கடைகளின் வியாபாரங்களில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன், உணவகங்கள் நடத்துபவர்களும் இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இரவு நேரங்களில்தான் அதிகளவான மக்கள் உணவகங்களுக்கு உணவருந்த வருவதுண்டு. அதுவும் தற்போது தடைக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் வர்த்தகளுக்கு இந்த ஊரடங்கு நடைமுறை பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை தமிழ் கடைகளில் விசா இல்லாத அதிகளவான தமிழ் இளைஞர்கள் பணிபுரிகின்ற நிலையில், தற்போது இந்த இளைஞர்களுக்கு சம்பளம் வழங்குவார்களா என்பதும் கேள்விக்குறியே!