திலீபனின் நினைவுத் தூபியை முன்னர் இருந்தவாறே அமைப்பது தொடர்பாக ஆராய்ந்தனர்.

ஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலுடன் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை முன்னர் இருந்தவாறே அமைப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் மற்றும் மாநகர ஆணையாளர் சத்தியசீலன் உள்ளிட்டோர் இன்று ஆராய்ந்தனர்.

ஈழத் தமிழர்கள் சார்பில் இந்திய அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் 15 நாள்கள் உணவு ஒறுப்புப் போராட்டத்தை நடத்தி 1987ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 26ஆம் திகதி வீரச்சாவடைந்த தியாக தீபம் திலீபனின் நினைவாக நல்லூரில் தூபி அமைக்கப்பட்டது. 
தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அகிம்சைப் போராட்டத்தை நடத்திய இடத்தில் அந்தத் தூபி அமைக்கப்பட்டது. அந்தத் தூபி அரச படைகளால் அழிக்கப்பட்டது. அதனை மீளவும் அதே வடிவில் சீரமைப்பது தொடர்பிலேயே இன்று ஆராயப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆனோல்ட், உறுப்பினர்கள் ந.லோகதயாளன் , தர்சானந் ஆகியோருடன் மாநகர ஆணையாளர் , பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் நேரில் ஆராய்ந்தனர்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 651ஆவது மாவீரனாகவும் அகிம்சை போராட்டம் நடத்திய இரண்டாவது வீரனும் அதனால் வீரச்சாவடைந்த முதல் வீரனுமான திலீபனின் நினைவாக இரண்டு தடவைகள் நினைவுத் தூபி எழுப்பப்பட்டது.அந்தத் தூபி அரச படைகளால் உடைத்தெறியப்பட்டது.

இந்த நிலையில் பழைய வடிவில் 23 அடி உயரத்தில் அனைவரும் புனிதம் பேணும் வகையில் தியாக தீபம் திலீபனின் தூபி அமைக்கப்படும் என யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்தார்.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் திலீபனின் நினைவு வாரத்தில் புதிய தூபியைத் திறக்கும் வகையில் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டுக்கொண்டார்.