மோட்டார் வாகன திணைக்கள சேவைகள் இடைநிறுத்தம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கோவிட்-19 தொற்று நிலமை காரணமாக ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலையை கருத்திற்கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே.அழககோன் அறிவித்துள்ளார்.

அதற்கமைய, நாராஹேன்பிட்டி மற்றும் வேரஹெரவிலுள்ள அதன் அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, சேவை பெறுவோர் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பில் வருந்துவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட்-19 பரவலைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி முதல், நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர மற்றும் கம்பஹாவிலுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை (20) முதல் அதன் சேவைகள் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்பட்டதோடு, தொலைபேசியின் ஊடான முற்பதிவின் அடிப்படையில் சேவைகள் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.