இராணுவத்தால் ஆள்கள் காணாமல் ஆக்கப்பட்ட குற்றச்சாட்டு : பிரதி மன்றாடியார் அதிபதி யாழ். மேல் நீதிமன்றில் தோன்றல் . (இணைப்பு 02)

யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்களில் முதலாவது பிரதிவாதியான அப்போது நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் துமிந்த கப்பட்டிவெலான சார்பில் சட்ட மா அதிபர் முன்னிலையாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அனுமதியளித்து இன்று கட்டளை வழங்கியது.

“முதலாவது பிரதிவாதியான இராணுவ கட்டளை அதிகாரி அரச உத்தியோகத்தர் ஆவார். அரச உத்தியோகத்தருக்கு எதிராக வரும் வழக்கு ஒன்றில் முன்னிலையாக வேண்டிய கடப்பாடு சட்ட மா அதிபருக்கு உண்டு. விரும்பினால் மட்டுமே அவர் விலகிக்கொள்ள முடியும்.
இந்த மன்றில் தற்போது அரசியலமைப்புக்கு உள்பட்டு ஆள்கொணர்வு மனுக்களே முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது உரிமை மீறப்பட்டுள்ளதா? என்பதனை ஆராய்வதற்காகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உரிமை மீறப்பட்டுள்ளதாக இந்த மன்று கட்டளையிடும் பட்சத்திலே இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முதலாவது பிரதிவாதி மேஜர் ஜெனரல் துமிந்த கப்பட்டிவெலானவுக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்படும். 
அந்த வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வரும் போது, அதனைக் கொண்டு நடத்தவேண்டியே பொறுப்பு சட்ட மா அதிபருக்கு உண்டு. எனவே ஆள்கொணர்வு மனுக்கள் மீதான கட்டளையை மேல் நீதிமன்று வழங்கும்வரை முதலாவது பிரதிவாதியான மேஜர் ஜெனரல் துமிந்த கப்பட்டிவெலான சார்பில் சட்ட மா அதிபர் முன்னிலையாவதற்கு கோரப்பட்ட விண்ணப்பம் இந்த நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
அத்துடன், இதற்கு ஆட்சேபனை தெரிவித்து மனுதாரர்களால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கட்டளை வழங்கினார்.
1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்களை பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த நவம்பர் 9ஆம் திகதி 12 பேர் சார்பில் தனித்தனியே ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
அவற்றில் 3 மனுக்களை மட்டும் மேல் நீதிமன்று ஏற்றுக்கொண்டது.
9 பேரின் மனுக்கள் 2002ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் யாழ்ப்பானத்தில் நடத்த கூடாது என அப்போதைய யாழ்.மாவட்ட இராணுவ தளபதி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து , இந்த வழக்குகள் அக்கால பகுதியில் அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
வேறொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கொன்றை இன்னொரு மேல் நீதிமன்றில் மீள திறக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய யாழ்.மேல் .நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், 9 பேரின் ஆள்கொணர்வு மனுக்களைத் தள்ளுபடி செய்திருந்தார்.
மனுக்களில் 1ம் பிரதிவாதியாக துமிந்த கெப்பிட்டிவெலான 2ம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ம் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்றுவிசாரணைக்கு வந்தது.
சட்ட மா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர மேல் நீதிமன்றில் தோன்றினார். அவர்களுடன் அரச சட்டவாதிகள் நாகரட்ணம் நிஷாந்த், கே.பிரிந்தா ஆகியோரும் முன்னிலையாகினர்.
மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், எஸ்.சுபாசினி ஆகியோர் முன்னிலையாகினர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like