கடந்த சில வருடங்களாகவே தென்மராட்சி பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறது, அருந்தவபாலன் வெளியேறிய பின்னர் , தென்மராட்சிக்கு ஒரு உடையாரைப் போல கே.சயந்தனை நியமித்து விட்டார் எம்.ஏ.சுமந்திரன் .
ஒரு காலத்தில் தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர்களிற்கு ஒரு செயற்பாட்டு வரலாறு இருந்தது . நீண்ட செயற்பாட்டின் பின்னர்தான் பெரும்பாலானவர்கள் கட்சியில் முக்கிய பங்கு வகிக்க முடிந்தது .
இதில் 2010 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு சடுதியான மாற்றம் உண்டாகி விட்டது, இப்பொழுது அப்படியான செயற்பாட்டு பாரம்பரியமிக்க இளைஞர்களும் குறைவு, தலைவர்களும் இல்லை .
ஒவ்வொரு தலைவரையும் அதிகமாக யார் விசுவாசிக்கிறார்களோ , அவர்கள் முன்னுக்கு வரலாம் . தென்மராட்சியில் பல செயற்பாட்டாளர்கள் இருந்தும் , சுமந்திரனை அதிகம் விசுவாசித்தார் என்ற தகுதியினால் சயந்தன் சாவகச்சேரி தொகுதி கிளை தலைவராகவும் ஆகி விட்டார் .
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தொகுதி கிளைகளிலேயே , முக்கிய பிரமுகர்கள் இல்லாமல் , நீண்டகால செயற்பாட்டாளர்கள் முக்கிய பாத்திரம் வகிக்காத ஒப்பீட்டளவில் பலவீனமாக கிளை சாவகச்சேரி.
சயந்தனிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென சுமந்திரன் விரும்பியதால், ஏனைய பிரதேசங்களை போல சாவகச்சேரியில் இன்னொருவரை வளர்க்க , வளர சுமந்திரன் விரும்பியிருக்கவில்லை .
ஆனால் சசிகலா ரவிராஜ் கடந்த பொதுத் தேர்தில் களமிறங்கிய பின்னர் இந்த நிலைமையில் மாற்றம் உருவாகியுள்ளது .
தென்மராட்சியின் கணிசமானவர்கள் அவரை ஆதரிக்கிறார்கள், இதுவரை ஒதுங்கியிருந்த கட்சியின் தீவிர- மூத்த ஆதரவாளர்களும் அவரை ஆதரிக்கிறார்கள்.
சசிகலாவும் செயற்பாட்டு பாரம்பரியத்தை கொண்டவரல்ல, ஆனால் , விக்னேஸ்வரன் தொடங்கி சசிகலா வரை இமேஜ் அரசியலை தமிழ் அரசு கட்சி கையாண்டு வருகிறது .
ஆனால் தென்மராட்சியில் சசிகலாவை மக்கள் அங்கீகரித்தார்கள், சாவகச்சேரி தொகுதி கிளையாக சசிகலாவின் பிரச்சார நடவடிக்கையில் ஒத்துழைக்காமல் , எம்.ஏ.சுமந்திரனை பிரதானமாகவும் , சி.சிறிதரனை பகுதியளவிலும் அவர்கள் பிரச்சாரப்படுத்திய சூழலில், சசிகலா தென்மராட்சியில் அதிக விருப்பு வாக்கு பெற்றார் .
சசிகலாவின் வருகையுடன் தென்மராட்சியில் ஒரு உறைக்குள் இரண்டு வாள் நிலைமை, சயந்தன் தரப்பினருக்கு இது உவப்பாக இருக்காது, காரணம் சயந்தனின் வாளின் கூர் செயலிழந்து விட்டது.
ஆனால், கட்சியாக இது ஆரோக்கியமான நிலைமையே . கடந்த பொதுத்தேர்தலில் தனி ஆளாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட சசிகலா ரவிராஜ் , இனிமேல் அப்படி ஈடுபட தேவையிருக்காது.
ஏனெனில் , தீவிரமாக செயற்படும் ஒரு மருமகன் அவருக்கு கிடைக்கிறார், அது வேறு யாருமல்ல- கலையமுதன் மாவை சேனாதிராசா.
கடந்த பொதுத்தேர்தலில் மாவை சேனாதிராசாவிற்காக பிரச்சாரத்தில் கலையமுதன் மட்டும்தான் ஈடுபட்டார்.
எம்.ஏ.சுமந்திரன் , சிறிதரன் தரப்பு மாவை தரப்பிலிருந்தவர்களையும் வளைத்துப் போட்டு தமக்கு மாத்திரம் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் .
இவைதான் மாவை சேனாதிராசா தோல்வியடைய பிரதான காரணம், அப்போது , கலையமுதன் பம்பரமாக சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கலையமுதனின் வருகையை குடும்ப அரசியல் என தமிழ் அரசு கட்சிக்குள் ஒரு தரப்பு விமர்சிக்கிறது மாவையும் , கலையமுதனும் தந்தை மகன்தான்.
ஆனால் , இன்றுள்ள தமிழ் அரசு கட்சியின் இளைஞர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் ஒரு பிரதேசசபையையோ , மாகாணசபையையோ , நாடாளுமன்றத்தையே குறிவைத்து தமிழ் தேசிய வேடம் போட்டவர்கள்தான்.
கிட்டத்தட்ட தசம வீதத்தை தவிர மிகுதி யாருக்கும் அரசியல் பன்மைத்துவ சிந்தனை கிடையாது .
ஒப்பீட்டளவில் கலையமுதன் இவற்றில் விதிவிலக்கானவர், உண்மையில் அந்த வகையானவர்கள் அரசியலுக்கு வருவது தமிழ் அரசு கட்சியை வளப்படுத்தும் .
இப்பொழுது விடயம் என்னவென்றால் – மாவை சேனாதிராசாவின் புதல்வன் கலையமுதனும் , ரவிராஜ்- சசிகலா தம்பதியின் மகள் பிரவீனாவும் இல்லறத்தில் இணையவுள்ளனர் .
அடுத்த மாதத்தின் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் திருமணம் நடக்கும் என நம்பகமான தகவல் .
காதலித்ததாக கூறப்பட்டாலும் பெற்றோர்கள் நிச்சயித்த திருமணமாம் அது, இரு வீட்டார் பேச்சிலும் கட்சியின் மூத்த தலைவர் சீ.வி.கே.சிவஞானம், பொருளாளர் கனகசபாபதி ஆகியோர் ஈடு பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
நேற்று மற்றும் நேற்று முன்தினம் மாவை சோனாதிராஜாவின் வீட்டில் தீவிர திருமணம் தொடர்பில் தீவிர பேச்சுக்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
எது எப்படி ஆயினும் தென்மராட்சி மருமகனாக கலையமுதன் செல்வது உறுதி அத்தடன் சசிகலாவின் அரசியலில் அது கூடுதல் பலமாக இருக்கும்.
தென்மராட்சியை சீரழிக்கும் கும்பல் விரைவில் அடையாளம் தெரியாமல் போகும் என சாவகச்சேரி மக்கள் தெரிவிக்கின்றனர்.