திடீரென அதிகரித்த உப்பின் விலை – அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை

திடீரென ஏற்பட்ட உப்பு விலை அதிகரிப்பை குறைப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மாந்தை உப்பு நிறுவனத்தினால் குறித்த விலை அதிகரிப்பு தொடர்பான அறிவித்தல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், குறித்த விடயம் தொடர்பாகவும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பாகவும் பிரதேச மக்களினால் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவுடன் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

இதுவரை காலமும் 50 கிலோ கிராம் உப்பு மூட்டை 675 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மாந்தை உப்பு நிறுவனத்தினால் 950 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமையை தெரியப்படுத்தினார், மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.

குறிப்பாக, கடலுணவு விளைச்சல் தற்போதைய காலப் பகுதியில் அதிகளவில் காணப்படுகின்ற நிலையில், கொவிட் – 19 காரணமாக அவற்றை ஏற்றுமதி செய்யவோ விற்பனை செய்யவோ முடியாத சூழல் காணப்படுகின்றது.

இதனால், கடற்றொழிலாளர்கள் கருவாட்டு உற்பத்தியை முடியுமான அளவு அதிகரிக்குமாறு கடற்றொழில் அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கருவாடு பதனிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற உப்பின் விலை அதிகரிப்பானது பல்வேறு தளங்களில் தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச, சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி உப்பின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.