இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஓர் நற்செய்தி!

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்காக பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உணவு பொட்டலம் ஒன்றை இலவசமாக பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு பொட்டலங்கள் இரண்டை இரு சந்தர்ப்பங்களில் பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

14 நாட்களுக்கு தேவையான படி தயாரிக்கப்பட்டுள்ள இந்த உணவு பொட்டலத்தை மாவட்ட செயலகம் மற்றும் அரசாங்க அதிபர்களின் ஊடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவுகள் 13ல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 6025 குடும்பங்களுக்காக பழங்கள் மற்றும் உலர் உணவு பொதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம, தெஹிவளை, மொரட்டுவை மற்றும் கடுவலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் தற்போதைய நிலையில் செயற்படுத்தப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள 6807 குடும்பங்களுக்கும் இந்த உணவு பொட்டலம் விநியோகிக்கப்பட உள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள 2245 குடும்பங்களுக்கும் இந்த உணவு பொட்டலங்கள் பெற்றுக் கொடுக்கப்பட உள்ளன.

அதேபோல், கேகாலை மாவட்டத்தில் ஆயிரத்து 248 குடும்பங்களுக்கு இந்த உணவு பொட்டலங்கள் பெற்றுக் கொடுக்க தயார் நிலையில் உள்ளன.

அதற்கு மேலதிகமாக புதிதாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ள குடும்பங்கள் தொடர்பிலான தகவல்களை பிரதேச செயலாளர் காரியாலயத்தின் ஊடாக பெற்று அவ்வாறு புதிதாக இணையும் குடும்பங்களுக்கும் குறித்த பத்தாயிரம் ரூபா உணவு பொட்டலத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.