முள்ளிவாய்க்காலில் 9A பெற்ற மாணவி : போரின் வடுவினால் வைத்தியராக மாற இலட்சியம்!

இறுதி யுத்தத்தின் போது மருத்துவ சேவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணரமுடிந்தது. இதன் அடிப்படையில் எனது எதிர்கால இலட்சியம் மருத்துவர் ஆவதே என முள்ளிவாய்க்கால் மேற்கு கணிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் கல்விகற்று கடந்த வருடம் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றி 9A சித்திகளைப்பெற்ற மாணவி வித்தியானந்தன் கம்சிகா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

விஞ்ஞானத்துறையில் கல்வியை தொடரவுள்ள எனக்கும் சக மாணவர்களுக்கும் கல்விகற்றுத்தந்த சகல ஆசிரியர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் யுத்த பாதிப்புக்குள்ளாகிய எமது குடும்பம் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் நிலையிலும் எனது கல்விக்காண முழு உதவிகளையும் எனது பெற்றோர் தந்துதவியுள்ளனர்.

இந்நிலையில் எனது எதிர்காலத்தில் நான் ஒரு சிறந்த மருத்துவராகி மக்களுக்கு சேவையாற்றுவதே எனது இலட்சியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வெளியாகியுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் முள்ளிவாய்க்கால் மேற்கு கணிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றிய 12 மாணவர்களில் 8 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.