200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்: சடலமாக மீட்கப்படும் காட்சிகள்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 90 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

மத்திய பிரதேசம் மாநிலம் நிவாரி மாவட்டம் சேதுபுரா கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் கடந்த 4ம் தேதி காலை 9 மணியளவில் தவறி விழுந்தான்.

இதையறிந்த பெற்றோர், உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் குழந்தையை மீட்கப் போராடினர்.

குழந்தை 60 அடி ஆழத்தில் சிக்கியது கண்டறியப்பட்டதும், அதன் அருகிலேயே மற்றொரு குழியை தோண்டி சிறுவனை மீட்கும் முயற்சிகள் நடந்தன.

குழந்தை மீட்கப்படும் காட்சிகள்- வீடியோவை காண

அத்துடன் சிறுவனுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டாலும், 4ம் தேதி மாலையே சிறுவனின் உடலில் அசைவுகள் இல்லாமல் இருந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
மேலும் குறித்த ஆழ்துளை கிணற்றில் 100 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்ததாலும் மீட்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டது.

எனினும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வந்த நிலையில், 90 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில் குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும், மற்றொரு ஆழ்துளை கிணறு தோண்டி தரப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

இன்னும் எத்தனை பிஞ்சுகளை காவு வாங்கப் போகிறதோ ஆழ்துளை கிணறுகள்!!!!