யாழ் சுழிபுரத்தை அதிர வைத்த இரட்டைப் படுகொலை; கல்வியியலாளர்களுக்கு அவமானம்! நேரடி ரிப்போர்ட்

சுழிபுரம் இரட்டைப் படுகொலை சம்பவம் ஒரு குழுவால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. 10 பேருக்கு மேற்பட்ட குழுவொன்று இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது என அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

முன் பகையால் அல்லது திடீர் கோபத்தால் இது நடந்தது எனக் கூறி கடந்துவிட முடியாது. இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்.

சுழிபுரம் – குடாக்கனையில் நீண்ட காலமாக (சுமார் 25 வருடங்கள்) கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.

இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என பிரதேச மக்கள் வலி.மேற்கு பிரதேச செயலகம், வலி.மேற்கு பிரதேச சபை மற்றும் அரச நிறுவனங்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேற்படி இரட்டைப் படுகொலையில் கொல்லப்பட்ட தேவராசா என்பவரின் குடும்பம் கடந்த காலங்களில் கசிப்பு விற்பனைக்கு எதிராக குரல் கொடுத்தது என பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

குடாக்கனையில் இடம்பெறும் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையால் சுழிபுரம் என்ற புண்ணிய பூமிக்கு – புனித பூமிக்கு தொடர்ந்தும் அவப்பெயர் ஏற்பட்டு வருகின்றது.

ஆனால், சுழிபுரத்தில் உயர்மட்ட கல்வியியலாளர்கள், கல்வி சார்ந்த அமைப்புக்கள், ஏனைய பல அமைப்புக்கள், வல்லமை படைத்த நபர்கள் இருக்கின்ற போதிலும் மேற்படி கசிப்பு உற்பத்தி விற்பனை தொடர்பாக இவர்கள் எவரும் உரிய கரிசனை எடுப்பதில்லை என குடாக்கனை பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

சுழிபுரம் என்ற வரலாற்றுப் பூமியின் பெயர் சீரழிக்கப்படுவதற்கும், இந்த ஊருக்கு அவப்பெயர் ஏற்படுவதற்கும் இனியும் சுழிபுரம் மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்கள் காரணமாக இருக்கப்போகின்றார்களா என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

உயிரிழந்த இருவரும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் என ஒதுக்கிவிட்டு, தாங்களும் ஒதுங்கி இருக்காமல் இந்த படுகொலையுடன் குடாக்கனை பிரதேச கசிப்பு உற்பத்திக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சுழிபுரம் பிரதேசத்தில் உள்ள கல்வியியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு துறைசார்ந்த விற்பன்னர்களும் முன்வரவேண்டும்.

இந்த விடயத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு அளப்பரியது. அலுவலகங்களில் இருந்து பேஸ்புக் பார்த்து செய்தி எழுதிவிட்டு தமது கடமை முடிந்தது என இருக்காமல், களத்தரிசனம் செய்யுங்கள், உள்ளே இறங்கினால் இந்தக் கொலை தடுத்திருக்கப்படக்கூடியது என்ற உண்மை உங்களுக்கு தெரியவரும், உண்மையை உலகுக்கு வெளிப்படுத்துங்கள்.