ஊனமுற்றிருப்பதும் வறுமையும் கல்விக்கு தடையல்ல என்பதை நிரூபித்த இரு மாணவர்கள்!

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஐந்தாம் தர புலமைப் பரிசில் பெறுபேற்றின்படி ஆசியருடன் கூடிய அதிக முயற்சியை எடுத்து இரு மாணவர்கள் சாதித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பகுதியில் தாயை இழந்த மாணவரொருவர் விசேட தேவையுடைய மாணவரொருவர் தனது விடா முயற்சியுடன் ஆசிரியரின் வழிகாட்டலின் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்து பெருமை சேர்த்துள்ளார்.

திருகோணமலை – கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண்/அல் ஹிஜ்ரா கனிஷ்ட வித்தியாலயத்தை சேர்ந்த விசேட கல்விப் பிரிவில் தோற்றிய முஹம்மது சமீர் முஹம்மது உசாமா எனும் மாணவனே 158 புள்ளிகளை பெற்று தனக்கும் தனது பாடசாலைக்கும் பெறுமை சேர்த்து சாதனை படைத்துள்ளார்.

பாடசாலையின் அதிபர் பி.அப்துல் றவூப் தலைமையின் கீழ் கண்காணிக்கப்பட்ட விசேட கல்விப் பிரிவில் ஆசிரியர்களாக ஏ.எஸ்.எம்.சாஹா,கே.எஸ்.சிவராசா, ஆசிரியை ஏ.அஸ்மினா போன்றோர்களின் சிறந்த வழிகாட்டுதல்களே குறித்த மாணவனின் பெறுபேற்றுக்கு முக்கிய காரணமாகவும் விளங்குகிறது.

தனது தாயை சிறுவயதில் இழந்த குறித்த மாணவன் தனது கல்வியினை கற்பதற்காக தனது வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது.

இவர் மூன்று சக்கர நாற்காலி ஊடாகவே பாடசாலைக்கு தன்னை தனது வளர்ப்புத் தாய் அழைத்துச் செல்வதாகவும் முற்சக்கர இயந்திர மோட்டார் வண்டி ஊடாகவும் தனியாகவும் வந்து தனது கல்விக்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

தன்னால் நடக்க முடியாத விசேட தேவையினை கொண்டதாக இருந்தாலும் கல்விக்கு ஊனமுற்றிருப்பதும் வறுமை போன்றன தடையல்ல எதிர்காலத்தில் சிறந்த வைத்தியனாக வருவதே எனது இலட்சியமாகும் என முஹம்மது உசாமா தெரிவித்தார்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்திலே வலது கையிலுள்ள விரல்களை விபத்தில் இழந்த மாணவனும் புலமை பரீட்சையில் வெற்றிப்பெறுள்ளார்.

புத்தளம் – அனகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் தனது வலது கை விரல்களை இழந்த நிலையில், இடது கையால் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

புத்தளம் – மதுரங்குளி பகுதியைச் சேர்ந்த ஷெவான் சஞ்ஜீவ, 2017ஆம் ஆண்டு இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் சந்தர்ப்பத்தில் இயந்திரமொன்றிற்குள் சிக்குண்டு, தனது விரல்களை இழந்துள்ளார்.

அதுவரை வலது கை பழக்கத்தை கொண்டிருந்த சஞ்ஜீவவிற்கு, விபத்தின் பின்னர் கல்வியில் பின்னடைவை சந்திக்க நேரிட்டது.

இவ்வாறான நிலையில் வகுப்பாசிரியர் பிரதீப் புஷ்பகுமாரவின் வழிகாட்டலின் கீழ் இந்த மாணவன் தனது கல்வியை தொடர்கின்றார்.

இந்த நிலையிலேயே இலங்கையில் கொவிட் தொற்றின் முதலாவது அலை பரவ ஆரம்பித்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த ஆசிரியரின் வீட்டில் தங்கியிருந்து, தனது கல்வியை தொடர்ந்துள்ளான் இந்த மாணவன்.

இவ்வாறு கல்வி பயின்ற சஞ்ஜீவ, புலமை பரிசில் பரீட்சையில் 170 புள்ளிகளை பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.