யாழில் அட்டகாசம் தொடர்ந்தால் சிரச்சேத தண்டனை வழங்குவேன்!

யாழ்ப்பாணத்தில் அட்டகாசம் தொடர்ந்தால் சிரச்சேத தண்டனையை அமுல்ப்படுத்துவேன் என யாழ்ப்பாண ராஜா ரெமிஜியஸ் கனகராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது நெதர்லாந்தில் வசித்து வரும் யாழ்ப்பாண ஆரியசக்கரவர்த்தி அரச குடும்பத்தின் தற்போதைய தலைவரான ராஜா ரெமிஜியஸ் கனகராஜா புலம்பெயர் தமிழ் சமூக ஊடகமொன்றில் வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தனது ஆலயமொன்றை சிலர் சேதமாக்குவதாகவும், இதனால் தான் கோபமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் எங்கள் ஆலய ஐயனின் மனைவியுடன் பேசும்போது சொன்னேன்,ஒருவருக்கு சிரச்சேதம் செய்தால் யாழ்ப்பாணம் கட்டுப்பாட்டுக்குள் வரும் என கூறியபோது, அது குறித்து ஊடகவியலாளர் விளக்கமாக வினவினார்.

இதன்போது, யாழ்ப்பாணத்தில் சிரச்சேத தண்டனை அமுல்ப்படுத்தினால்தான் கட்டுப்பாட்டிற்குள் வருவார்கள். இதுதான் ஒரே வழி. 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இப்படியான நடவடிக்கைகள் இருக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

சங்கிலியனின் உத்தரவை புறக்கணித்ததால்தான் அவர் மன்னாரில் 600 பேரை சிரச்சேதம் செய்தார். சங்கிலியன் கொலை செய்தார்தான். நானும் அந்த நிலையில் இருந்தால் அதைத்தான் செய்திருப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் என்னை கொலையாளி குடும்பமென சில தமிழர்கள் சொல்கிறார்கள். எங்கள் குடும்பம் கொலை செய்ததென்றால், 30 வருடமாக நீங்கள் என்ன செய்தீர்கள் என கேள்வியெழுப்பிய அவர் , அந்த சம்பவத்திற்காக வருத்தமடைவதாகவும் தெரிவித்தார்.