முதலமைச்சர் விருது வழங்கும் விழா: கலைஞர்கள் கௌரவிப்பு

வடக்கு மாகாணத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் விருது வழங்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

வட. மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு யாழ்.நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது.

மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் கலைஞர்களுக்கான விருதுகளையும் வழங்கிவைத்தார்.

இயல், இசை, நாடகம், சிறுகதை, ஓவியம் ஆகிய பிரிவுகளின் கீழ் வட. மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 21 கலைஞர்கள் இதன்போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வட. மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன், மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராஜா. யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணவதி தெய்வேந்திரம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வட. மாகாணத்தில் கலை கலாசாரத் துறைகளில் சிறப்பான சேவைகளை வழங்கியவர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் பொருட்டு முதலமைச்சர் விருது விழா ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வருகின்றது. கடந்த வருடம் முதலமைச்சரினால் பிற்போடப்பட்டிருந்த குறித்த விருது வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.