மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் யாழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

மாவீரர்தினத்தில் அஞ்சலி நிகழ்களை பொது இடங்களில் நடத்த யாழ் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

பொது இடங்களில் நினைவுகூரவும் மக்களை ஒன்றுகூட்டவும் தடைவிதிப்பதாக யாழ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அந்த அமைப்பில் நினைவுநாளை நடத்துவத தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106ஆம் பிரிவின் பொதுத் தொல்லை என்ற வியாக்கியனத்தின் கீழ் இந்த விண்ணப்பத்தை

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில்

நினைவேந்லை நடத்துவதற்கு தடை கேட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன்,

க.சுகாஷ், மாநகர சபை உறுப்பினர்கள் வரதாசா பார்த்திபன், மயூரன் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக தடைக் கட்டளை வழங்குமாறும் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.

அந்த அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைகூருவதற்காக நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த மாவீர்ர் நாள் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கட்டளை வழங்கவேண்டும் என்று பொலிஸார் விண்ணப்பத்தில் கேட்டிருந்தனர்.

அத்துடன் கோவிட் -19 தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தையும் பொலிஸார் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

அதனடிப்படையில் வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போது வழக்கின் பிரதிவாதிகளான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன்,

கே.சுகாஷ் உள்ளிட்டோர் முன்னிலையாகி தமது ஆட்சேபனையை முன்வைத்தனர். தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, ஏனைய பிரதிவாதிகள் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையாகி நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

இந்த நிலையில் வழக்கு இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு இன்று முற்பகல் 11 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்குத் தொடுனரான பொலிஸார் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த பிரதி மன்றாடியார் அதிபதிகள் பிரபாகரன் குமாரரட்ணம், ஹரிப்பிரியா ஜயசுந்தர

மற்றும் மூத்த அரச சட்டவாதி ஜனக பண்டார ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

அதிலிருந்து உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதியளிக்க முடியாது என்று தமது சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

போரில் உயிரிழந்த வீரர்கள் உறவுகளை நினைவேந்துவது மரபு என பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் சமர்ப்பணம் செய்தனர்.

இருதரப்பு சமர்ப்பணங்களும் சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்றது. இந்த நிலையில் வழக்கின் கட்டளையை இன்று மாலை 3 மணிக்கு நீதிமன்றம் வழங்கியது.