முடிவுக்கு வரும் தனுஷ் பெற்றோர் சர்ச்சை!

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று மேலூரைச் சேர்ந்த தம்பதியர் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தனுஷ் தங்கள் மகன் எனவும், வயதான தங்களின் வாழ்வாதாரத்துக்காக தனுஷ் பணம் தரவேண்டுமெனவும் கோரி, மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், மேலூர் நீதித் துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தனுஷ் முறையிட்டிருந்தார். இதையடுத்து, பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு தனுஷுக்கு மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து தனுஷ் தனது பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை எனவும், இந்தப் போலி ஆவணங்களின் அடிப்படையில்தான் தனுஷுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது எனவும், போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ததற்காக தனுஷுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மதுரைக் கிளையில் மனு கொடுத்தனர். இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது

இந்நிலையில், இந்த மனு இன்று (மார்ச் 23) நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல’ எனக் கூறி அம்மனுவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது நீதிபதி, “போலி ஆவணங்கள் விவகாரம் நீதிமன்றத்திற்கு வெளியே நிகழ்ந்தவை. அதனால், தம்பதியர் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைப்பை நாடலாம். மனுதாரருக்கு இங்கே நிவாரணம் வழங்க முடியாது” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like