தோனிக்கு நடனப் பயிற்சி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் கால் வைத்திருக்கிறார்கள். ஐ.பி.எல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக, சென்னையில் நடைபெறும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களிடத்தில் ஐ.பி.எல் கொண்டாட்டத்தைத் தொடங்கிவைக்க வந்திருக்கும் இவர்கள், அணியின் புரமோஷனிலும் கவனம் செலுத்திவருகின்றனர். அந்தவகையில் சென்னை அணியின் புரமோஷன் வீடியோவுக்கான ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெறுகிறது. இதில் கேப்டன் தோனி உட்பட பலருக்கும் நடனப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

நடனத்துக்கும் தோனிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஷாருக் கானின் டான் திரைப்படம் வெளியானபோது நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு, இரு அணியினரையும் வைத்து ஷாருக் நடத்திய நிகழ்ச்சியில் நடனமாடி தோனி அசத்தினார். அதன்பிறகு, அவ்வப்போது போட்டிகளுக்குப் பிறகான கொண்டாட்டத்தில் தோனி நடனமாடிய வீடியோக்கள் வெளியிடப்படும். அதன்மீது லயித்துப்போன ரசிகர்கள் பலரும், தற்போது சென்னை அணியின் புரமோஷன் வீடியோவில் தோனிக்கு எந்த மாதிரியான ஸ்டெப்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியக் காத்திருக்கின்றனர்.

தமிழ்சினிமா முதல் பாலிவுட் வரையிலும் புகழ்பெற்ற நடிகர் மற்றும் நடன இயக்குநர் பிரபுதேவா இந்த புரமோஷன் வீடியோவுக்கான நடனத்தை உருவாக்கியிருக்கிறார். எனவே, பிரபுதேவாவின் ஸ்டெப்களில், தோனி உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரின் ஆட்டத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். கடைசி முறை சென்னை அணி விளையாடியபோது எடுத்ததுபோல இந்த வருடமும் சுவாரசியமான புரமோஷன் வீடியோ ஒன்று கிடைக்குமா என்று பார்க்கலாம். ஏனென்றால், டிவிஎஸ் ஸ்டார் பைக் விளம்பரத்துக்காக தோனியை வேட்டியணிந்து நடனமாட வைத்த பெருமை பிரபுதேவாவுக்கு ஏற்கனவே உண்டு. எனவேதான் இம்முறை இருவரும் இணைந்து என்ன செய்யப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like