யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் சில பிரேதேச மாணவர்கள் ஒரே வகுப்பறைக்குள் பூட்டி வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
கொரோனா அபாய நிலையை கருத்திற் கொண்டு இதனை தாம் மேற்கொண்டதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்தபோதும், சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்றும், பாடசாலை அதிபரே தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் பெற்றோர்கள் குற்ற சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பில் வடக்கு நிர்வாக உயர்மட்டத்தில் முறையிடப்பட்டு, தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறதாகவும் கூறப்படுகின்றது.
கொரோனா தொற்றாளர்கள் சிலர் அண்மைக்காலத்தில் தீவகப் பகுதிகளில் அடையாளம் காணப்பட்டனர். எனினும் பல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் குணமடைந்து, பிரதேசங்கள் இயல்புக்கு திரும்பி விட்ட நிலையில் தற்போது காரைநகர் மற்றும் வேலணை பகுதிகளில் சிலர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வேலணை மத்திய கல்லூரிக்கு ஊர்காவற்றுறை பகுதியிலிருந்து சென்ற மாணவர்கள் அனைவரும் ஒரே வகுப்பறைக்குள் வைத்து பூட்டப்பட்டதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
அத்துடன், மாணவர்களிடம் சுகாதார வைத்திய அதிகாரியின் கடிதமும் கோரப்பட்ட நிலையில் சுகாதார பிரிவினர், கல்வியமைச்சின் உயரதிகாரிகளின் தலையீட்டையடுத்து மாணவர்கள் விடுவிக்கப்பட்டதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.