திருகோணமலை மூதூர் பெரிய வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 2017 புரட்டாதி மாதம் அளவில் இரண்டு 8 வயது நிரம்பிய மாணவிகள் மீது பாடசாலை மலசலக் கூடப்பகுதியில் வைத்து தகாத முறையில் நடந்து கொண்ட எதிரிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கினார்.
அரச சட்டத்தரணி கலீமா பயிஸ் குறிக்கப்பட்ட வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் நெறிப்படுத்தினார்.
இரு சிறுவர்கள் மீது துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்து திரவம் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த திரவம் எதிரியின் இரத்த மாதிரியைப் பெற்று டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன்பின்னர் டிஎன்ஏ அறிக்கையை சமர்ப்பித்து இரசாயண பகுப்பாய்வாளர் நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.
99 சதவீதம் எதிரிதான் குற்றச் தசெயலை புரிந்துள்ளார் என அரச சட்டவாளர் கலீமா பயிஸ் நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தார். குறிக்கப்பட்ட அனைத்து சாட்சியங்களையும் ஆய்வு செய்த நீதிமன்றம் பாடசாலையில் வைத்து மாணவி மீது தகாத முறையில் நடந்து கொண்டவர் எதிரிதான் என்பது டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதால் இரு மாணவிகளது இரண்டு வழக்குகளிற்கும் எதிரியை மன்று குற்றவாளி என தீர்ப்பளித்தது.
குறித்த எதிரிக்கு இரு வழக்கிற்கும் சேர்த்து 20 ஆண்டுகள் கடூழிய சிறை, 10 இலட்சம் நட்ட ஈடு, கட்டத்தவறின் 4 ஆண்டுகள் கடூழிய சிறை, 20,000 ரூபா தண்டம், கட்டத்தவறின் ஓராண்டு சிறை என நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
2017ஆண்டு இந்த சம்பவம் இன முறுகலை எற்படுத்தியிருந்ததுடன், இன ரீதியாக பதிலுக்கு பதில், ஆர்ப்பாட்டம் நடைபெற்று அரசியல் ரீதியான தலையீடும் அதிகரித்த நிலையிலேயே விஞ்ஞான தொழிநுட்ப விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவு களத்தில் இறங்கியதை அடுத்து ஆறு எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி கிடைக்கப்பெற்ற டிஎன்ஏ அறிக்கையின் படி ஐந்து சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டு குற்றவாளிக்கு எதிராக மாத்திரம் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை இல்லாத நேரத்தில் விசேட வகுப்பு என சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் வகுப்பிற்கு மாணவிகள் செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். மேற்குறித்த சம்பவமும் ஞாயிற்றுக்கிழமை ஒன்றில் இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.