பயந்த ஆண்ட்ரியா: நம்பிக்கையளித்த இயக்குநர்!

திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பது இயக்குநரின் முக்கியமான பணியாக இருக்கிறது. குறிப்பிட்ட சில இயக்குநர்களே தமிழ் சினிமாவில் நடிகர்களைத் தேர்வு செய்வதில் பாராட்டு பெறுகின்றனர். அதில் வெற்றிமாறனும் ஒருவர். வட சென்னை படத்தில் நடித்துவரும் ஆண்ட்ரியாவும் அந்தக் கருத்தைச் சொல்வதோடு அதற்கான காரணத்தையும் கூறுகிறார்.

வட சென்னை படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். “பெரும்பாலான இயக்குநர்கள் தோற்றம் அல்லது கால்ஷீட்டையே ஒரு நடிகரை தனது படங்களில் நடிக்கவைப்பதற்கான அளவுகோலாகப் பார்க்கின்றனர். ஆனால் வெற்றிமாறன் நடிகர்களைத் தேர்வு செய்யும் முறை சுவாரஸ்யமானது. என்னைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்பது தோற்றத்தை வைத்து மட்டும் அமைந்துவிடவில்லை. அவர் மக்களின் குணாதிசயங்களைப் பார்க்கிறார்; தனது கதாபாத்திரங்களும் அதைப் பெற்றிருக்க வேண்டும் என விரும்புகிறார். கதாபாத்திரம் குறித்து எழுதும்போது அதன் உடல் அமைப்பு பற்றி அவருக்குத் தெரியும். அந்த நடிகர் இயல்பாக அந்த குணாதிசயங்களைப் பெற்றிருந்தால் அவரை உடனே தேர்ந்தெடுத்துவிடுகிறார். தோற்றம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். இதை முதிர்ச்சியான முறையாகப் பார்க்கிறேன். பல இயக்குநர்கள் இதைச் செய்யவில்லை” என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

சந்திரா கதாபாத்திரம் குறித்துக் கூறுவது கதையின் சஸ்பென்ஸைச் சொல்வதாக இருக்கும் என்பதால் ஆண்ட்ரியா அதற்கு பதிலளிக்கவில்லை. ஆரம்பத்தில் தனக்குச் சம்பந்தமில்லாத கதாபாத்திரத்தில் நடிப்பதில் சிறு பயம் இருந்ததாகவும் இயக்குநரின் வேலை பாணி தெரிந்ததும் படப்பிடிப்பு சுவாரஸ்யமாக மாறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “ஒரு நடிகையாக அவரை முழுமையாக கண்மூடித்தனமாக நம்பவேண்டும். பலநேரங்களில் தளத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் அவருக்கு தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பது தெரியும். அதனால் அவர் சொல்வதைச் செய்யவேண்டும். ஒரு தருணத்தில் இதைச் செய்தவுடன் என் வேலை சுலபமாக மாறியது. அதுவரை வட சென்னைப் பெண்ணாக நான் நடிப்பது குறித்து மிகவும் பயந்துகொண்டிருந்தேன். மக்கள் இதைப் பார்த்துவிட்டு சரியில்லாத தேர்வு என்று சொல்லிவிடுவார்களோ என்று நினைத்தேன். எனது தடைகளை விட்டுவிட்டு இயங்கத் தொடங்கினேன்” என்று கூறியுள்ளார்.