விடுதலைப் புலிகளால் எனக்கும் கூறப்பட்டது – மனம் திறந்த மஹிந்த

நாட்டின் தலைவர் மடு தேவாலயத்திற்கு வருவதற்கு கூட விடுதலைப்புலிகளிடம் அனுமதி பெற வேண்டியதொரு காலம் காணப்பட்டதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மன்னாரில் “தம்பபவனி” எனும் இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது பேசிய அவர்,

நாட்டின் தேசிய மின் கட்டமைப்பிற்கு 103.5 மெகாவொட் திறனை இணைக்கும் இலங்கையின் பாரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைக்க கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

நண்பர்களே, ஒரு பணியை ஆரம்பித்து அதனை நிறைவேற்றுவது என்பது அரசியல்வாதி ஒருவருக்கு மட்டுமின்றி அனைத்து மனிதனுக்கும் தனது வாழ்வில் கிடைக்கக் கூடிய ஒரு மகிழ்ச்சியான விடயமாகும்.

2014 ஆம் ஆண்டில் முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்த திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணிப்பதற்காக அதிகபட்ச மகிழ்ச்சியுடன் இன்று நான் மன்னார் தீவுக்கு வந்தேன்.

மன்னாருக்கு வரும்போது சுற்றியுள்ள வீதிகள் அனைத்தும் கார்பட் இடப்படுவதை நான் கண்டேன்.

மின்சார சபையின் இத்திட்டத்தினாலேயே சுற்றியுள்ள வீதிகள் கார்பட் இடப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் கூறினார்.

2008 ஆம் ஆண்டளவில் மடு தேவாலயத்திற்குச் செல்லும் வீதி புனரமைக்கப்பட்டு, மடு திருவிழாவிற்கு நாட்டின் தலைவராக நான் வரவிருந்தபோது, இங்கு வருவதற்கு விடுதலைப் புலிகளின் அனுமதி பெற வேண்டும் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் தலைவருக்கு மடு தேவாலயத்திற்கு வருவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளிடம் அனுமதி பெற வேண்டியதொரு காலம் காணப்பட்டது. ஆனால் இன்று அவ்வாறு இல்லை.

இந்நாட்டின் அனைத்து பிரஜைகளும் வடக்கிலிருந்து தெற்கிற்கும், கிழக்கிலிருந்து மேல் மாகாணங்களுக்கும் சுதந்திரமாக பயணிக்கக் கூடிய யுகமொன்றை அமைப்போம் என நான் அன்று மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன்.

இன்று இந்த தம்பபவனி மின் உற்பத்தி நிலையம் கூட அந்த சுதந்திரத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்டதே என்றார்.