தனக்காக ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிய கணவரை பிரிந்தார் சசிகலா

சசிகலா புஷ்பா எம்.பி தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். டெல்லி குடும்பநல நீதிமன்றம் இருவருக்கும் பரஸ்பர விவாகரத்து அளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அடையல் என்ற கிராமத்தில் சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்தவர் சசிகலா புஷ்பா(41). டீச்சர் ட்ரெயிங் படித்துவிட்டு வேலைக்குக் காத்திருந்த சமயத்தில், நெல்லை மாவட்டம் உவரி கிராமத்தை சேர்ந்த லிங்கேஸ்வர திலகம் என்பவருடன் 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.

லட்சிய வேலையான டீச்சர் வேலை கிடைத்தபாடில்லை. சென்னையில் கணவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்துவந்த ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில் நர்சரி டீச்சராக வேலைக்கு சேர்ந்தார். அரசியல் ஈடுபாடு காரணமாக அதிமுகவில் நுழைந்து அதே வேகத்தில் மணல் மனிதரின் ஒத்துழைப்பு, ஐஏஎஸ் அதிகாரிகளின் நட்பு காரணமாக அடுத்தடுத்த பதவிகளைப் பெற்று உச்சத்திற்கு சென்றார்.

2011ஆம் ஆண்டு முதல் அதிர்ஷ்ட காற்று அவர் பக்கம் வீசியது. தூத்துக்குடி மாநகராட்சி மேயர், அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் என அடுத்தடுத்து பதவி கிடைத்தது. மாநில மகளிரணி செயலாளர் பதவியும் கிடைத்தது. உச்சத்திற்கு போன அதே வேகத்தில் கீழே விழுந்தார் சசிகலா புஷ்பா.

ஆண் நண்பருடன் ஆபாசமாக பேசியது. திருச்சி சிவா எம்பியை விமானநிலையத்தில் அறைந்தது என சர்ச்சையில் சிக்கினார். உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று ஜெயலலிதாவிற்கு எதிராக ராஜ்யசபாவில் பேசி கண்ணீர் விட்டார். அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவினால் நீக்கப்பட்டார். அரசியல் வாழ்க்கை வீழ்ச்சியடைந்த அதே நேரத்தில் குடும்ப வாழ்க்கையிலும் கசப்பு உருவானது.

சசிகலா புஷ்பாவும், அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகனும் டெல்லி துவாரகாவில் உள்ள குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதி பி.ஆர்.கேடியா முன்னிலையான அமர்வு முன்பாக பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இவர்கள் இருவருக்கும் இடையிலான விவாகரத்துக்கு அனுமதி வழங்குவதாக கூறியுள்ளார். இருவரும் அவரவர்களின் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.