லண்டனில் தந்தையால் கொல்லப்பட்ட பிள்ளைகள்! நீதிமன்றில் வாசிக்கப்பட்ட தாயின் உருக்கமான அறிக்கை

லண்டனில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் படுகொலை செய்த நிலையில், நீதிமன்றில் தாயின் அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடராஜா நித்தியகுமார் கடந்த ஏப்ரல் 26ம் திகதி கிழக்கு லண்டனின் Ilford பகுதியில் தனது பிள்ளைகளான 19 மாதங்களான பவின்யா நித்தியகுமார் மற்றும் மூன்று வயதுடைய நிஜிஷ் நித்தியகுமார் ஆகியோரை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

41 வயதான நித்தியகுமார் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஓல்ட் பெய்லியில் அண்மையில் விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது குழந்தைகளின் தாயின் அறிக்கை ஒன்று நீதிமன்றில் வாசிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

“ஒரு குறையும் இல்லாத, எப்போதும் உதவ தயாராக இருக்கும் என் மகன் நிஜிஷ் என்றும், விளையாட்டுப்பிள்ளை என் மகள் பவின்யா என்றும் பிள்ளைகளை வர்ணித்துள்ளார் குழந்தைகளின் தாய்.

வாழ்வே வெறுமையாகிவிட்டது போல் இருக்கிறது, இனி வாழ்வதில் அர்த்தம் என்ன என்றும் தோன்றுகிறது, எனக்கு முன் என் பிள்ளைகள் இறக்கும் ஒருசூழலை நான் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை.

எந்த தொந்தரவும் செய்யாத என் மகன் நிஜிஷ் விட்டுச் சென்ற பொம்மைகள், எனக்கு அவனது நினைவுகளை மீண்டும் மீண்டும் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன.

பவின்யா உண்மையில் ஒரு இரட்டைக் குழந்தை, அவளுடன் உருவான மற்றொரு குழந்தை இறந்துவிட, அவள் மட்டும் அதிர்ஷ்டவசமாக எனக்குக் கிடைத்தாள்.

என் குழந்தைகளுக்காகவே வாழ்ந்தேன். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அவர்கள் வயதுக்கு அவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருந்தார்கள், அது என்னை மகிழவும் பெருமிதம் கொள்ளவும் செய்கிறது.

என் கணவர் அமைதியான நல்ல கணவனாகவும் என் பிள்ளைகளுக்கு பாசமான தந்தையாகவும் இருந்தார் . வீட்டுவேலைகள் செய்வதுக்கு உதவியாக இருந்தார்.

ஆனால் இப்படி ஒரு சம்பவம் நிகழும் என என் கனவிலும் நான் நினைக்கவில்லை.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குழந்தைகளின் தந்தையான நடராஜா நித்தியகுமார் தொடர்ந்தும் காலவரையறையின்றி வைத்தியசாலையில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.