வவுனியா வைரவபுளியங்குளச்சந்தியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் , நோயாளர்காவு வண்டியில் ஏற்ற முற்பட்ட போது காதலிக்கு ஒரு SMS அனுப்பிவிட்டு வருகிறேன் என கூறியதால் ஊழியர்கள் கோபமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா நகரிலிருந்து குருமன்காடு சந்தி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் குருமன்காட்டு சந்தியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தினை அண்மித்த பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டது.
குறித்த இளைஞன் தொலைபேசியிலேயே முக்கிய கவனம் செலுத்திக்கொண்டு வந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.
அந்த இளைஞன் முகநூலுடாக பெண்ணொருவரை காதலித்து வந்த நிலையில், இருமுறை அந்த பெண்ணை நேரில் சந்திக்க முயற்சி செய்து தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது முறையாக காதலியை சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அதிக வேகத்தில் இருசக்கர வாகனத்தை செலுத்திக்கொண்டு சென்ற அவர் விபத்தை ஏற்படுத்தி காயமடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த பொது மக்கள் நோயாளர் காவு வண்டியை அழைத்த நிலையில் நோயாளர்காவு வண்டி ஊழியர்கள் இளைஞரை வண்டியில் ஏற்ற முற்பட்ட போது, காதலிக்கு ஒரு SMS அனுப்பிவிட்டு வருகிறேன் என கூறியதால் ஊழியர்கள் கோபமடைந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.