முகநூலில் இனக்குரோத பரப்புரை – சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்

முகநூல் மூலம் இனங்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், வெறுப்புணர்வு கருத்துக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரியை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கம்பகா மாவட்டத்தைச் சேர்ந்த, கிரிஷன் சிறிநாத் பெரேரா என்ற இராணுவ அதிகாரி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 17ஆம் நாள் கைது செய்யப்பட்டார்.

முகநூல் ஊடாக இவர் வெறுப்புணர்வைத் தூண்டும் பரப்புரைகளில் ஈடுபட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட இவர் நேற்று கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.

இவருக்கு பிணை வழங்கக் கோரி சட்டவாளர் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிவான், விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த இராணுவ அதிகாரியின் கணினி, அலைபேசி உள்ளிட்டவற்றை அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பி அறிக்கையை சமர்ப்பிக்கவும், முகநூல் நிறுவனத்தின் விரிவான அறிக்கையை ஒன்றைப் பெற்று குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.