ரணிலைக் கவிழ்க்க உதவி கோரும் மகிந்த அணி!

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூட்டு எதிரணியைச் சேர்ந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் காமினி லொக்குகே ஆகியோர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு பிரிவுகளும் ஆதரவளிப்பது முக்கியம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தனக்கு ஆதரவாக உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 44 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தரவிடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 உறுப்பினர்களும், அந்தக் கட்சியின் பக்கமுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 1 உறுப்பினரும் உள்ளனர்.

எனினும், அதுரலியே ரத்தன தேரரும், விஜேதாச ராஜபக்சவும், தற்போது சுதந்திரமான உறுப்பினர்களாகச் செயற்படும் நிலையில், ஐதேகவுக்கு 105 உறுப்பினர்களே இருக்கின்றனர்.

அதேவேளை, கூட்டு எதிரணிக்கு 52 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு 44 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like