மாணவர்கள் கணணியில் தொடர்ந்து பார்வையை செலுத்திவருவதன் காரணமாக பார்வைக் கோளாறுக்கு ஆளாகி நாளொன்றுக்கு 20-30 பேர் சிகிச்சைக்காக வருகின்றனர்.
அதனால் ஒன்லைனில் படிக்கும் மாணவர்கள் 20 நிமிடத்துக்கு ஒருமுறையேனும் ஓய்வெடுத்துக்கொள்ளவேண்டும்.
இது தொடர்பாக அரசாங்கம் மாணவர்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என மாத்தறை பெரிய வைத்தியசாலை கண் சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் பிரியங்க இத்தவெல தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த காலப்பகுதியில் அதிகமான மாணவர்கள் வாந்தி, மயக்கம், கண் நோவு, கண்களில் இருந்து கண்ணீர் வடிதல் போன்ற நோய் அறிகுகளுடன் தனிப்பட்ட ரீதியிலும் அரச வைத்தியசாலைக்கும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வருகை தருகின்றார்கள்.
இவர்கள் அனைவரிடமும் ஒன்லைன் மூலம் படிக்கின்றீகளா என நான் கேகும்போது அதற்கு ஆம் என்றே பதில் அளிக்கின்றார்கள்.
எமது கண்கள் ஒருவிடயத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதற்கு பலக்கம் இல்லை. தற்காலத்தில் மாணவர்கள் மணித்தியால கணக்கில் ஒன்லைன் முறையிலான கல்வியில் ஈடுபட்டுவருகின்றார்கள்.
கணணி அல்லது கையடக்க தொலைபேசியின் திரையை தொடர்ச்சியாக பார்ப்பதன் காரணமாக பார்வை கோளாறுகளுக்கு ஆளாகி இருக்கின்றார்கள்.
இந்த காலப்பகுதியில் என்னிடம் சிகிச்சைக்கு வரும் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களில் 60 வீதத்துக்கும் அதிகமானவர்களுக்கு இந்த பிரச்சினை இருக்கின்றது.
அத்துடன் சிறுவர் கண்சிகிச்சை நிலையத்துக்கு வரும் பிள்ளைகளில் 80வீதத்துக்கும் அதிகமானவர்களிடம் இந்த நிலையை காணக்கூடியதாக இருக்கின்றது. இது நல்ல நிலைமையல்ல.
இந்த நோய் அறிகுறியுடன் சில பிள்ளைகளின் செயற்பாடுகளும் மாறி இருக்கின்றன. அவர்களுக்கு வழமைக்கு மாறாக அதிகம் கோபம் ஏற்படுகின்றது.
நாட்டின் தற்போதைய நிலையில் ஒன்லைன் கல்வி இடம்பெறவேண்டும். என்றாலும் இதுதொடர்பாக அனைவரும் அறிந்திருக்கவேண்டும். மேற்கத்திய மருத்துவத்தில் இதற்கு கணணி பார்வை நோய்க்குறி என்றே தெரிவிக்கின்றனர்.
அதனால் ஒன்லைன் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்கள் கணணியை அல்லது கையடக்க தொலைபேசியை தொடர்ச்சியாக பார்க்காமல், 20நிமிடத்துக்கு ஒரு முறை 20 செக்கன்களேனம் ஓய்வெடுத்துக்கொள்ளவேண்டும்.
ஆசிரியர்களும் இதுதொடர்பில் அறிந்துகொண்டு மாணவர்களுக்கு அதன் பிரகாரம் ஓய்வு வழங்கவேண்டும்.
அத்துடன் ஒன்லைனில் படிக்கும் முறையை மாணவர்களுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.