தடுப்பூசிகளால் கொரோனா ஒழியாது… இதை கட்டாயம் செய்யுங்கள்: நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய சீனா

கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொண்டாலும், கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் மாஸ்க் அணிவதும் தொடர வேண்டும் என தங்கள் நாட்டு மக்களுக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் எதிர்வரும் பிப்ரவரி மாதம் வரையில் அதிக பாதிக்கப்பட வாய்ப்புள்ள குழுக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் கண்டிப்பாக மாஸ்க் அணிவது கட்டாயம் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த டிசம்பர் முதல் எதிர்வரும் பிப்ரவரி மாதம் தொடர்ந்து மே மாதம் வரையில் குறிப்பிட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்துள்ள சுகாதாரத்துறை,

முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள், சுங்கத்துறை, பொது போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் என மக்களுடன் அதிகம் இணைந்து பணியாற்றுவோருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.

ஜூலை மாதம் தொடங்கி சீனாவில் தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சுமார் ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு கொரோனா தடுப்பூசி கிடைத்துள்ளது.

இருப்பினும், பொதுமக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்பது மட்டுமல்ல, சமூக இடைவெளி, கைகளை தொடர்ந்து கழுவுதல் என தங்களை பாதுகாக்க வேண்டும் என சுகாதாரத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எந்த தடுப்பூசியும் 100 சதவீதம் பாதுகாப்பை அளிக்காது என குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை, நம்மை நாமே பாதுகாப்பது மிகுந்த பலனை அளிக்கும் என தெரிவித்துள்ளது.

சீனாவில் பல நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.

தற்போது, Sinopharm மற்றும் Sinovac Biotech ஆகிய மருந்து நிறுவனங்களின் தடுப்பூசிகள் அவசர தேவைகளுக்காக பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், CanSino Biologics நிறுவனத்தின் தடுப்பூசியை ராணுவத்தினருக்கு அளிக்க அனுமதி வழங்கப்பட்டாலும், பொதுமக்களுக்கு செலுத்த இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.