யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள அரசஅலுவலகம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் , சுவிஸ்லாந்தில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட விவாகரத்தான 37 வயதான குடும்பப் பெண் ஒருவரிடம் வட்சப் மூலமான தொடர்பினைப் பேணி லட்சக்கணக்கான பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த உத்தியோகத்தர் சுவிஸ் பெண்ணிடம் தன்னையும் விவாகரத்தானவர் என கூறியே அவருடன் தொடர்பைப் பேணியுள்ளார்.
அத்துடன் அறக்கொடை நிறுவனம் ஒன்றில் பிரதான பங்காளராகக் காட்டிக் கொள்ளும் குறித்த அலுவலர் தனது பேஸ்புக்கில் வறுமையில் வாடும் குடும்பம் ஒன்று தொடர்பாக விபரங்களைப் பதிவிட்டுள்ளார்.
அது மற்றவர்களால் பகிரப்பட்ட போது அந்த பதிவை பார்த்த குறித்த சுவிஸ் பெண் அந்த குடும்பத்தரை முதல் முதல் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டதாகவும் அதன் பின்னரே இருவரும் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகவும் தெரியவருகின்றது.
தானும் திருமணம் முடித்து விவாகரத்துச் செய்துவிட்டதாகவும் குறித்த அலுவலர் சுவிஸ் பெண்ணுக்கு கூறியுள்ளார்.
அத்துடன் தனது வயோதிபத் தாயை தரக்குறைவாக தனது மனைவி நடத்த தொடங்கியதாலேயே தான் விவாகரத்து செய்ததாகவும் சுவிஸ் பெண்ணிடம் அவர் கூறியுள்ளார்.
இவற்றை நம்பிய அப் பெண் குறித்த குடும்பஸ்தருக்கு 25 லட்சம் ரூபா அளவில் பணம் அனுப்பியதாக கூறி அவற்றுக்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்.
வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதாக கூறியே அப் பணத்தை குறித்த அலுவலர் வாங்கியதாக பெண் குறிப்பிட்டார்.
இந் நிலையில் சுவிஸ் பெண்ணின் உறவினரான சாவகச்சேரியைச் சேர்ந்த இன்னொரு பெண்ணிடம் குறித்த குடும்பஸ்தர் தொடர்பாக சுவிஸ் பெண் கூறி வந்துள்ளார்.
சாவகச்சேரியைச் சேர்ந்த அப்பெண்ணின் புலனாய்வு நடவடிக்கையின் மூலமே குறித்த அரச அலுவலர் திருமணம் முடித்து 2 குழந்தைகளுக்கு தந்தை எனவும் அவர் தனது மனைவியுடன் சந்தோசமாக வாழ்வதும் அவரது மனைவியும் ஆசிரியையாக உள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த குறித்த சுவிஸ் பெண் யாழ் நபர் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.