சங்கானை குருக்கள் படுகொலை – இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் – தூக்குத் தண்டனை வழங்குமாறு கோரிக்கை!

சங்கானையில் ஆலயக் குருக்களை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தவர்கள் எதிரி கூண்டில் நிற்கும் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு அதிஉச்ச தண்டனையான தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த், தனது தொகுப்புரையில் கோரியுள்ளார்.

குறித்த வழக்கின் தீர்ப்பு நாளைமறுதினம் வியாழக்கிழமை (22) வழங்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், திகதியிட்டதுடன் , அன்றைய தினம் வரையில் எதிரிகள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி சங்கானை, முருகமூர்த்தி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கொள்ளையிடப்பட்டன.

துப்பாக்கிச் சூட்டில் சிவானந்தக் குருக்கள் நித்தியானந்தக் குருக்கள் கொல்லப்பட்டார். அவரது மகன்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினரால் இராணுவப் புலனாய்வாளர்கள் என கூறப்படும் காசிநாதன் முகுந்தன் அல்லது சக்தி, பாலசுப்பிரமணிம் சிவரூபன் மற்றும் இராணுவச் சிப்பாய் பேதுறு குணசேன ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற சுருக்கமுறையற்ற விசாரணைகளின் பின்னர் வழக்கேடுகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தமை, துப்பாக்கி சூடு நடத்தியமை, குருக்களைக் கொலை செய்தமை மற்றும் மூவரை படுகாயப்படுத்தியமை ஆகிய 4 குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிரிகள் மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து வழக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்று இன்றைய தினம் வழக்குத்தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு தொகுப்புரைகள் இடம்பெற்றன.

வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் தொகுப்புரை வழங்கினார்.

அதில் அரச தரப்புச் சாட்சியங்கள் மற்றும் எதிரிகளிடம் முன்னெடுத்த குறுக்கு விசாரணைகளின் அடிப்படையில், 3 எதிரிகள் மீதான நான்கு குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே எதிரிகள் மூவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் மன்றிடம் கோரினார். குறித்த வழக்குக்கான தீர்ப்பு எதிர்வரும் வியாழக்கிழமை வழங்கப்படவுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like