கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வருகிறார் சசிகலா!

உடல்நலக் குறைவால் காலமான கணவர் நடராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்க பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வருகிறார் சசிகலா.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறையில் 4 ஆண்டு காலம் தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா.

கடந்த ஆண்டு கணவர் நடராஜனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது பரோலில் வந்திருந்த சசிகலா, சென்னையில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கி இருந்து கணவர் நடராஜனை மருத்துவமனைக்கு சென்று பார்த்து வந்தார்.

கடந்த 16-ந் தேதி நடராஜன் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் சசிகலா பரோலில் வருவார் என கூறப்பட்டது.

இது தொடர்பாக அவரது வழக்கறிஞர்கள் பெங்களூரு சிறையில் நேற்று சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி இருந்தனர். சிறை நிர்வாகத்திடம் பரோல் கேட்டு விண்ணப்பித்தனர்.

எனினும் முதலில் கணவர் நடராஜன் சுகயீனமுற்று இருந்த போது பரோலில் வெளியில் வந்து 5 மாதங்களே ஆன நிலையில் கணவர் இறந்தால் மட்டுமே பரோல் வழங்கப்படும் என சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை நடராஜன் உயிர் பிரிந்தது. இதையடுத்து நடராஜன் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் சில மணிநேரங்கள் வைக்கப்படும்.

பின்னர் தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்துக்கு நடராஜன் உடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறும்.

இதனையடுத்து நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வர 15 நாள் பரோல் கேட்கிறார் சசிகலா.

காலை 8.30 மணிக்கு பரோல் மனுவில் சசிகலாவின் கையெழுத்தை பெறுகின்றனர் வழக்கறிஞர்கள்.

பரோல் மனுவுடன் நடராஜனின் இறப்பு சான்றிதழும் இணைத்து சிறைத்துறையிடம் வழங்கப்படும். மனு கிடைத்தவுடன் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் பரோல் வழங்குவார் என தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து உடல்பரிசோதனைக்குப் பின்னர் சசிகலா சிறை விடுப்பில் வெளிவருவார் என்று தெரிகிறது.

அநேகமாக காலை 9 மணிக்குப் பிறகு சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து வெளிவருவார் என்று தெரிகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like