அதிகாலையில் காலமானார் ‘புதிய பார்வை’ நடராசன்

சசிகலாவின் கணவரும், புதியபார்வை இதழின் ஆசிரியரும், ஈழ விடுதலைப் போராட்டத்தை தீவிரமாக ஆதரித்து வந்தவருமான ம.நடராசன் இன்று அதிகாலை காலமானார்.

உடல்நலக் குறைவினால், சென்னையில் உள்ள குளோபல் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ம. நடராசன் இன்று அதிகாலை 1.30 மணியளவில் காலமானார் என்று மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவப் பருவத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம், அரசியலில் நுழைந்த இவர், பின்னர் திமுகவுடன் இணைந்து செயற்பட்டார். எனினும் தேர்தல் அரசியலில் அவர் ஈடுபடவில்லை.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார்.

எம்.ஜி.ஆருக்குப் பின்னர் ஜெயலலிதாவை, அரசியலில் நிலை நிறுத்துவதிலும் இவர் கணிசமான பங்கை ஆற்றியிருந்தார்.

புதியபார்வை இதழின் ஆசிரியராகவும் அவர் பணியாற்றினார்.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் மீது தீவிர பற்றுக் கொண்ட இவர், அதற்காக ஆட்சியாளர்களின் பல்வேறு நெருக்கடிகளையும், வழக்குகளையும் எதிர்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறைந்த நடராசனின் உடல் இன்று காலை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், அதன் பின்னர் தஞ்சாவூரில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like