வடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியாவில் வறட்சி காரணமாக 12,034.25 ஏக்கர் நெல் முற்றமுழுதாக அழிவடைந்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் ஏற்பட்ட வறட்சி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
நாடு பூராவும் ஏற்பட்ட கடுமையான வறட்சி நிலையில் வவுனியா மாவட்டமும் உள்ளடங்குகின்றது. வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரையில் 2017 மற்றும் 2018 பெரும்போகத்தின் இலக்காக 53,885.5 ஏக்கரை விளைச்சலுக்கு எடுத்திருந்தோம்.
அந்த அடிப்படையில் மழைவீழ்ச்சியை அடிப்படையாக கொண்டு 48,399 ஏக்கருக்காக பயிர்ச்செய்கை கூட்டங்களை நடத்தியிருந்தோம்.
எனினும் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக 29,840.5 ஏக்கர் வயல் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொண்டிருந்தோம். சராசரியாக 50 வீதமான காணிகளில் மாத்திரமே பயர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
பயிர்ச்செய்கையின் பின்னரான காலப்பகுதியில் எதிர்பார்த்த மழை பெய்யாத காரணத்தினால் 12034.25 ஏக்கர் பகுதிகளில் செய்யப்பட்ட விவசாயம் முற்றுமுழுதாக அழிவடைந்துள்ளன.
அந்த அடிப்படையில் 6,170 விவசாயிகள் முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நீரின்மை காரணமாக 2018ஆம் ஆண்டுக்கான சிறுபோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
15,900 ஆயிரம் ஏக்கர் சிறு போகத்திற்காக எடுத்திருந்தோம். நீரின்மை காரணமாக 300 ஏக்கர் நிலத்தில் மாத்திரமே பயிர்ச்செய்கை மேற்கொள்ள தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.