“சாலைப்பூக்கள்” ஈழத்து திரைப்பட வெளியீடு!


யுத்தத்தில் நேரடியான பாதிப்புக்களை எதிர் கொண்ட ஈழத்து சிறுவர்கள் அதன் பின்னரான தற்கால சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சாலைப்பூக்கள் என்ற திரைப்படம் யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா திரையரங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி காலை முதல் இப் படத்தின் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளது என்று அப் படத்தின் இயக்குனரும், தென்னிந்திய திரைப்படங்களின் நடிகருமான சுதர்சன் ரட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இலங்கையில் மிக நீண்ட காலமாக நடைபெற்று வந்த யுத்தம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் யுத்தம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முதன் முறையாக யுத்தத்தினால் நேராடியான பாதிப்புக்களை எதிர் கொண்ட சிறுவர்களை மையப்படுத்திய முழு நீள படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கான கதையின் கருவாக்கம் முருகண்டி பிள்ளையார் ஆலயத்தில் கச்சான் விற்கும் சிறுவன் ஒருவன் 10 நிமிடத்தில் தொடர்ச்சியாக எதிர் கொண்ட 3 பிரச்சினைகளை மையப்படுத்தி, அத்தோடு கற்பனைகளையும் புகுத்தி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப் படத்திற்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மூன்று மாத கால படப்பிடிப்பு நடைபெற்றது. முற்றுமுழுதாக ஈழத்து கலைஞர்களின் உழைப்பில் உருவாகியது. 30 பேரின் உழைப்பில் சுமார் 8 இலட்ச ரூபாய் உழைப்பில் இத் திரைப்படம் முழுமைபெற்றுள்ளது.

இப் படத்தின் இசையமைப்பாளராக வளர்ந்துவரும் ஸ்ரீ.நிர்மலன் பணியாற்றியுள்ளார் என்றார்.


Get real time updates directly on you device, subscribe now.

You might also like