சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை?

குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதன் ஆபத்துக்களை இலங்கை தெளிவாகக் காட்டுகின்றது என பன்னாட்டு சட்டவாளர் றிச்சர்ட் ஜே றோஜெர்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு சுயாதீனமாக இயங்கி வரும் இலங்கையின் நிலைமாறுகால நீதிச்செயற்பாடுகளைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் (Sri Lanka Monitoring and Accountability Panel. MAP) ஒருங்கிணைப்பாளராக றிச்சர்ட் செயற்படுகின்றார்.
மேலும், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்யும் கம்போடிய கலப்பு நீதிமன்றத்தின் சட்டவாளராகவும் றிச்சர்ட் காணப்படுகின்றார்.

இந்நிலையில், இலங்கை தொடர்பில் அவர் விசேட கருத்துக்களை முன்வைத்து வருகின்றார், இலங்கை விவகாரம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் உள்ள நிலைமை குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்படுவதன் ஆபத்துக்களைத் தெளிவாகக் காட்டுகின்றது, அதாவது பெருமளவிலான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் சித்திரவதையும் பாலியல் வன்செயலும் இப்போதும் திட்டமிட்ட அமைப்புசார் குற்றங்களாகவே இருப்பது, இது இலங்கை அரசாங்கம் செயல்படுத்தும் வன்ம உத்தியின் பகுதி என்றே எண்ணச் செய்கிறது.

மனித உரிமைப் பேரவை இலங்கையின் நிலைமையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பும் படி, ஐ.நா பாதுகாப்பு சபை எடுத்துரைக்க வேண்டும்.

இது இலங்கையில் பாதிப்புற்ற மக்களுக்கும் பொறுப்புக்கூறல் கோரும் மனித உரிமைக் காவலர்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதாக அமையும் எஎன சுட்டிக்காட்டியுள்ளார்.