நாளை முதல் இலங்கைக்கு இராஜதந்திரத் தலையிடி….

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் நாளை முதல் இலங்கை விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் அல்ஹுசைன் எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை விவகாரம் சம்பந்தமாக அறிக்கையொன்றையும் வெளியிடவுள்ளார்.

இந்நிலையில், நாளைமுதல் இலங்கை விவகாரம் தொடர்பில் பேசப்படவுள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் ஜெனிவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசு செயற்படும் விவாதம் பற்றி இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் 15இற்கும் 20இற்கும் இடைப்பட்ட உப குழுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இக்கூட்டங்களில் இலங்கை அரசின் சார்பிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் புலம்பெயர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கண்டி கலவரம் உட்பட சமகாலத்தில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச் சம்பவங்களுக்குக் கடும் கண்டனத்தை சில நாடுகளும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்களும் முன்வைத்துள்ளனர்.

கடந்த வாரம் வெளியிட்டப்பட்டிருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல்ஹுசைனின் வாய்மூல அறிக்கையில், பொறுப்புக்கூறவில் இலங்கை அரசு அசமந்தப்போக்கில் செயற்பட்டுவருகின்றது என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

எதிர்வரும் 21ஆம் திகதி பிரதான உரையை நிகழ்த்தவுள்ள ஆணையாளர் செயித் அல்ஹுசைன், இலங்கை குறித்து காத்திரமான அறிக்கையொன்றைத் தயாரித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறியமுடிகின்றது.

அதனைத் தடுக்கும் வகையில் அங்குள்ள இலங்கையின் முக்கிய பிரதிநிதிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றபோதிலும் அது பயனளிக்கவில்லை என்றும் அறியமுடிகின்றது.