யாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மின் உயர்த்தி நோயாளிகளின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 13.03.2018 அன்று யாழ் போதனா வைத்தியசாலை கிளினிக் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மின் உயர்த்தி (லிப்ற்) நோயாளிகளின் பாவனைக்காக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி அவர்களது தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் சிகிச்சைக்கு வருகைதந்த நோயாளி ஒருவரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போது போதனா வைத்தியசாலை கிளினிக் நடைபெற்று வரும் ஒரு மாடியைக் கொண்ட கிளினிக் கட்டடத் தொகுதி 1977 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அன்று முதல் இக்கட்டடத்தில் வெளிநோயாளர் பிரிவு நீண்ட காலமாக இயங்கி வந்தது.
தற்போது மருத்துவ சிகிச்சை, குழந்தைகள் சிகிச்சை, தோல் சிகிச்சை, நீரிழிவு சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சைக் கிளினிக்குகள் உட்பட பெரும்பாலான கிளினிக்குகள் இக்கட்டடப் தொகுதியில் இயங்கி வருகின்றன.

விபத்து மற்றும் பிற காரணங்களால் நடக்க முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகள், வயோதிபர்கள் முதலானவர்கள் படிகளிலே ஏறி மாடிப் பகுயில் உள்ள கிளினிக்குகளுக்குச் சென்று சிகிச்சை பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இவர்களை பலர் சேர்ந்து சக்கரவண்டிகளிலே தூக்கி மேலே கொண்டு செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. கூடுதலான சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள் கீழே இறங்கி வந்து நோயாளிகளைப் பார்வையிட்டு வந்தனர்.

தற்போது புதிதாக மின் உயர்த்தி அமைக்கப்பட்டு நோயாளரின் பாவனைக்கு வந்துள்ளதால் நடக்க முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகள் தாமாகவே மாடியில் உள்ள சகிச்சை நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்று வரக்கூடியதாக உள்ளது.