ஹோட்டல் மீது தாக்குதல் – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீதான பெற்றோல் குண்டுத் தாக்குதல், மிகத் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட சம்பவம் எனவும் இது தொடர்பில் தாக்குதலுக்கு முன்தினம் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணையாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த பெற்றோல் குண்டுத்தககுதலுக்கு முன்னைய தினம் த.மு.தஸநாயக்க விளையாட்டு மைதானத்தில் இரவோடிரவாக 20 இற்கும் அதிகமான இளைஞர்கள் ஒன்றுகூடி, இந்த தாக்குதலை திட்டமிட்டமை தொடர்பில் விசாரணை அதிகாரிகள் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அதன்பிரகாரம், சதித் திட்டம் தீட்டியோரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அதன்படி ஏற்கனவே இந்த தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவன் ஒருவன் உள்ளிட்ட 7 பேருக்கும் எதிரான தண்டனை சட்டக் கோவையின் 131,140,419 ஆம் அத்தியாயங்களின் கீழும் 2007 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3(1) ஆம் அத்தியாயத்தின் கீழும், 2018 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசர கால சட்டத்தின் 24(1), 12(1) ஆம் அத்தியாயங்களின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படியே அவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கடந்த 11 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்துள்ள சந்தேக நபர்கள் இந்த ஹோட்டல் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

முதலில் ஹோட்டலின் முன் பகுதியில் பெற்றோலை ஊற்றிவிட்டு பின்னர் பெற்றோல் குண்டுத்தாக்குதலை நடாத்தியமை தொடர்பில் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டன.

அத்துடன் தாக்குதலுக்கு வந்த மூன்று மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந் நிலையில் தீக்கிரையான ஹோட்டலுக்கு அருகில் உள்ள மற்றொரு வர்த்தக நிலைய சி.சி.ரி.வி.கமராவில் இருந்த பதிவுகளை மையப்படுத்தி ஒரு சந்தேக நபரைக் கைது செய்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் ஏனையோரை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே ஆனமடுவ தககுதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களுக்கும் கண்டி வன்முறைகளுடனோ அதன் சூத்திரதாரிகளான மஹாசென் அமைப்பினருடனோ தொடர்புகள் உள்ளனவா எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.