ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இரும்பக உரிமையாளர் உள்ளிட்ட இருவருக்கு பிணை

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவரைத் தாக்க முற்பட்டமை மற்றும் அவரது கமராவை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட இரும்பக உரிமையாளர் உள்ளிட்ட இருவரை பிணையில் விடுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 16ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.

யாழ்ப்பாணம் கொக்குவில் சந்திக்கு அருகாமையிலுள்ள இரும்பகம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் சூரிய அடாவடிக் கும்பலால் தாக்கப்பட்டது. ஆவா குழுவால் அந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் டான் தொலைக்காட்சி சேவையின் ஊடகவியலாளர் நடராஜா குகராஜ், செய்தி சேகரிக்கச் சென்றிருந்தார்.

அவர் செய்தி சேகரிப்பதைத் தடுத்த அந்த இரும்பகத்தின் உரிமையாளர் மற்றும் சிலர், அவரது கமராவை பறித்துச் சேதப்படுத்தினர்.

தமது இரும்பகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்த இரும்பக உரிமையாளர் திட்டமிட்டிருந்தார் என்று பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

கமரா சேதப்படுத்தியமை தொடர்பில் ஊடகவியலாளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. கமராவை சேதப்படுத்தியவர்களையும் அவர் பொலிஸாரிடம் அடையாளம் காட்டியிருந்தார்.

இந்த நிலையில் இரும்பக உரிமையாளர் மற்றும் அவரது சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் நேற்று மாலை முற்படுத்தப்பட்டனர்.

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவரைத் தாக்க முற்பட்டமை மற்றும் அவரது கமராவை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸார் முதல் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

பொலிஸாரின் அறிக்கையை ஆராயந்த நீதிவான், சந்தேகநபர்களை நிபந்தனையுடனான பிணையில் விடுவித்ததுடன், வழக்கை வரும் ஏப்ரல் 16ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.