மக்களைப் பாதுகாக்க பலசேனாக்களோ, பலகாயக்களோ தேவையில்லை – மல்வத்த மகாநாயக்கர்

நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு ஆயுதப்படைகளும், காவல்துறையும் இருக்கும் போது, எந்தவொரு பலசேனாக்களோ பலகாயக்களோ தேவையில்லை என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.

‘தீவிரவாத அமைப்புகள் தீவிரவாதத்தைப் பரப்புகின்றனர். பகிரங்கமாக பணியகங்களை திறந்து வைத்து நாட்டின் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துகின்றன. இவை குறித்து அரசாங்கம் இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையர்கள் பொதுவாகவே குறுகிய நினைவாற்றலைக் கொண்டவர்கள். அண்மைய வன்முறைகள் கூட அவர்களால் விரைவாக மறக்கப்பட்டு விடக் கூடும்.

எனினும், 30 ஆண்டு போரினால் ஏற்பட்ட பின்னடைவுகளையும், கருப்பு ஜூலை போன்ற சம்பவங்களையும் நினைவில் கொண்டிருக்க வேண்டும்.

கண்டியில் அண்மையில் நடந்த சம்பவங்கள் நாட்டின் பெயருக்கு மாத்திரம் களங்கத்தை ஏற்படுத்தவில்லை. நாட்டின் பொருளாதாரத்திலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

அண்மைய வன்முறைகளுக்குக் காரணமான குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை அரசாங்கம் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.