சிறிலங்காவில் ஆங்காங்கே தொடரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்

சிறிலங்காவில் முஸ்லிம்களை இலக்கு வைத்த தாக்குதல்கள் ஆங்காங்கே இன்னமும் தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதான வன்முறைகள் இடம்பெற்ற கண்டி மாவட்டத்தில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் அங்கு நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

இரவுநேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வந்த ஊரடங்குச் சட்டமும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதுடன், இன்று பாடசாலைகளும் திறக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும், நேற்று அதிகாலை களுத்துறை மாவட்டத்தில் உள்ள தர்கா நகரிலும், புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆனமடுவவிலும் முஸ்லிம்களை இலக்கு வைத்த இரண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்று அதிகாலை நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் ஆனமடுவவில் உள்ள உணவகம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது.

எனினும், இந்த உணவகம், அங்குள்ள சிங்கள மக்களினதும், பௌத்த மதகுருமாரினதும் முயற்சியால் உடனடியாகத் தொண்டு அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்டு, 18 மணிநேரத்தில் மீளத் திறக்கப்பட்டது.

அதேவேளை தர்கா நகரில் உள்ள முஸ்லிம் ஒருவரின் வீடு ஒன்றின் மீதும் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் வீடு தீக்கிரையானது.

எனினும், இந்தச் சம்பவங்களினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, வன்முறைகளைத் தூண்டும் வகையில் செயற்பட்டவர்கள், சமூக ஊடகங்களில் பதிவுகளை இட்டவர்கள், சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் என்று 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் பாடசாலை மாணவர்கள் நால்வரும் அடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.