புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் கைவிடப்படும் அறிகுறி

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் மூன்று மாதங்களுக்கு மேலாக ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், மீள் செயற்பாடுகள் ஆரம்பமாவதற்கு மேலும் சில மாதங்கள் செல்லக்கூடுமென அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கூட்டரசின் ஆயுள், மாகாண சபைத் தேர்தல், நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகலையடுத்து புலனாய்வுப் பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் உட்பட மேலும் சில அரசியல் ரீதியான காரணங்களாலேயே புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளில் தேக்கநிலை நீடிக்கும் எனத் தெரியவருகின்றது.

2015 ஜனவரி 8ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதில் அரசு தீவிரம் காட்டியது.

இதற்குரிய பணிகளை முன்னெடுப்பதற்காக முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக்கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 21 பேரடங்கிய வழிநடத்தல் குழுவொன்று அமைக்கப்பட்டது.

வழிநடத்தல் குழுவால் ஏழு உபகுழுக்கள் அமைக்கப்பட்டன. அத்துடன், மக்களிடம் கருத்தறிவதற்கான குழுவொன்றையும் பிரதமர் அமைத்தார்.

மேற்படி குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு, அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிநடத்தல் குழுவால் இடைக்கால அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கை சபையில் சமர்ப்பிப்பதற்கு முன்னரே புதிய அரசியலமைப்புக்கு நாடளாவிய ரீதியில் எதிர்ப்புகள் வலுத்தன. பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமை நீக்கப்படக்கூடாது என்றும், புதியதொரு அரசியலமைப்பு தேவையில்லை என்றும், மறுசீரமைப்பு மட்டும் இடம்பெற்றால் போதும் என்றும் குரல்கள் வலுப்பெற்றன.

பௌத்த பீடங்களும் போர்க்கொடி தூக்கின. தேசிய அரசின் பிரதான பங்காளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பைப் பதிவிட்டிருந்தது.

இதனால், வழிநடத்தல் குழுவால் அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியாமலுள்ளது. சுமார் 3 மாதங்களுக்கு மேலாக நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

தற்போது புதிய பல பிரச்சினைகள் உருவாகியுள்ளதால் தடங்கலுக்கான அறிகுறிகள் பிரகாசமாகவே தென்படுகின்றன.

புதிய அரசியலமைப்புக்கான முயற்சியும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய அரசு தோல்வியடைவதற்கான பிரதான காரணங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இதை மையப்படுத்தியே சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்த அணி தீவிர பிரசாரத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிலவேளை, கூட்டரசின் ஆயுள் முடிவடையும்வரை புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணிகள் இழுத்தடிக்கபடலாம் என சில அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்வதாக இருப்பினும் அரசுக்குப் பாரிய சிக்கல்கள் ஏற்படும் என்றுள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் கைவிடப்படும் அறிகுறி

Get real time updates directly on you device, subscribe now.

You might also like